Asianet News TamilAsianet News Tamil

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை அரசே அகற்றும்.! வேதாந்தா நிறுவனத்தின் திட்டத்திற்கு முட்டுக்கட்டை போட்ட தமிழக அரசு

ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்ற அனுமதிக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை அரசு நிராகரித்துள்ளது. ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை அரசே மேற்கொள்ள முடிவு செய்துள்ளது. 

Thoothukudi District Collector has announced that the government will dispose of Sterlite plant waste
Author
First Published Jun 2, 2023, 10:04 AM IST

ஸ்டெர்லைட் போராட்டம்

தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையினால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு பொது மக்கள் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுத்தனர். போராட்டத்தின் 100 வது நாளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைப்பெற்ற பேரணியில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் 13 பேர்  உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.  இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலையின் தொடர் விதிமீறல் நடவடிக்கைகளின் காரணமாக கடந்த 2018 அன்று தமிழ் நாடு அரசு வேதாந்தா நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டது. இந்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றமும் 2020 ஆண்டு  உறுதி செய்தது. இந்த உத்தரவிற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

Thoothukudi District Collector has announced that the government will dispose of Sterlite plant waste

 பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி

மேலும், வழக்கு நிலுவையில் உள்ள காலகட்டத்தில் ஆலையின் பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதிகோரி இடைக்கால மனுவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பாக தாக்கல் செய்திருந்தது.  ஆலை பராமரிப்புப் பணிகளின் தேவை குறித்து ஆராய தமிழ் நாடு அரசு அமைத்திருந்த உயர்மட்டக் குழு  ஜூலை 2022ல் அறிக்கை ஒன்றை அரசிடம் தாக்கல் செய்திருந்தது.  இதனைத் தொடர்ந்து கடந்த மார்ச் 6ம் தேதி, தமிழ் நாடு அரசின் கூடுதல் முதன்மைச் செயலாளர், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியாளருக்கு, ஸ்டெர்லைட் நிர்வாகம், சில ஆலை பாரமரிப்புப் பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்க உத்தவிட்டார்.இதன்படி 10.04.2023 அன்று ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியை மேற்கொள்ளவும், பசுமைப் பரப்பை சீர்படுத்தும் பணியை மேற்கொள்ளவும் ஆலை நிர்வாகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

Thoothukudi District Collector has announced that the government will dispose of Sterlite plant waste

அனுமதி வழங்க கூடாது

வேதாந்தா நிர்வாகம் முக்கியமான மூன்று கோரிக்கைகளையும் எழுப்பியிருந்தது. அதில், ஸ்டெர்லைட் ஆலையின் கட்டிட, கட்டமைப்பு பாதுகாப்பை மதிப்பீட்டாய்வு செய்வதற்கான அனுமதி. ஆலையில் உள்ள உதிரிபாகங்கள் மற்றும் உபகரணங்களை வெளியே எடுத்துச் செல்வதற்கான அனுமதி. ஆலை வளாகத்தில் செயலற்ற நிலையில் கிடக்கும் இயந்திரங்கள் மற்றும் பிற மூலப்பொருட்களை அகற்றுவதற்கான அனுமதி கோரியிருந்தது. இதையடுத்து வேதாந்தா நிர்வாகத்தை ஆலைக்குள் கழிவுகளை அகற்றுவதற்காக அனுமதிக்கக் கூடாதென ஊர்ப் பொதுமக்களும் , சமூக ஆர்வலர்களும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.இதனையடுத்து தூத்துக்குடி ஆட்சியர் 29.05.2023 அன்று ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Thoothukudi District Collector has announced that the government will dispose of Sterlite plant waste

நிராகரித்த தமிழக அரசு

அந்த உத்தரவின்படி உச்சநீதிமன்றம் மற்றும் தமிழ்நாடு அரசின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்காக தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் மொத்தம் 9 பேர் கொண்ட உள்ளூர் மேலாண்மைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.  இக்குழுவில் தூத்துக்குடி மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்,  தொழிழ்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரக கூடுதல் இயக்குனர், மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தீயணைப்புத்துறை அதிகாரி, தூத்துக்குடி நகராட்சி செயற்பொறியாளர், ஓட்டப்பிடாரம் பஞ்சாயத்து வட்டார வளர்ச்சி அலுவலர், வேதாந்தா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி ஒருவர் மற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

Thoothukudi District Collector has announced that the government will dispose of Sterlite plant waste

புதிய நிபந்தனை விதித்த ஆட்சியர்

மாவட்ட நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட இக்குழுவே ஸ்டெர்லைட் ஆலைக்குள் நடைபெறவுள்ள கழிவுகளை நீக்கும் பணிகளைச் செய்வதற்கான  முன் அனுபவமுள்ள நிறுவனத்தைத் தேர்ந்தெடுக்கும்.  எத்தனை பணியாளர்கள், எத்தனை எந்திரங்கள், வாகனங்கள் இப்பணியில் பயன்படுத்தப்படவுள்ளது என்கிற விரிவான திட்டத்தை அந்த நிறுவனத்திடமிருந்து பெற்று அவ்வேலைக்கான ஒப்புதலை உள்ளூர் மேலாண்மைக் குழுவே வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்பணிகளை மேற்கொள்பவர்கள் ஆலையின் பக்கவாட்டில் உள்ள  வாசலை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆலைக்குள் பணியாளர்கள், வாகனங்கள் நுழைவதையும் வெளியேறுவதையும்  கண்காணிப்பு கேமிரா மூலம் பதிவு செய்யப்படும், கழிவுகள் அகற்றப்பட்ட பின்னர் வாகனங்கள், எந்திரங்களுக்கான அனுமதியை மேலாண்மைக் குழு ரத்து செய்யும் உள்ளிட்ட நிபந்தனைகளையும் மாவட்ட ஆட்சியர் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

மோடி படம் இருப்பதால் தமிழகத்தில் 250 ஆம்புலன்ஸ்கள் முடக்கம்.! திமுக அரசை விளாசும் அண்ணாமலை

Follow Us:
Download App:
  • android
  • ios