250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அண்ணாமலை,  பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளது எனும் காரணத்துக்காக, திறனற்ற திமுக அரசு முடக்கி வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

புதிய கால்நடை ஆம்புலன்ஸ்

திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே, சுமார் 39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கிராமப்புற மக்கள் மற்றும் விவசாயிகள் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பவை கால்நடைகள். கால்நடைகள் நோய் பாதிப்பினாலும், எலும்பு முறிவு உள்ளிட்ட பாதிப்புகளாலும், கன்று ஈனுவதிலும் உள்ள பிரச்சினைகளை எதிர்கொள்ளும்போது, அவற்றுக்கான உடனடி மருத்துவ முக்கியத்துவத்தை உணர்ந்த மத்திய அரசு, ஒவ்வொரு மாநில அரசுடனும் இணைந்து, 1962 என்ற அவசர கால இலவச ஆம்புலன்ஸ் சேவையை அறிமுகம் செய்திருந்தது. 

பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைப்பு

இதன் மூலம், ஒவ்வொரு மாநிலத்திலும், லட்சக்கணக்கான கால்நடைகள் உடனடி மருத்துவ உதவி மூலம் பலன் பெற்று வருகின்றன. தமிழகத்திலும், கடந்த ஆண்டு வரை சுமார் இரண்டரை லட்சம் கால்நடைகள் பயன்பெற்றுள்ளன. இந்த நிலையில், திருவள்ளூர் மாவட்டம் இருளம்பாளையம் அருகே, சுமார் 39 கோடி மதிப்புள்ள 250 புத்தம் புதிய கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்கள், சுமார் ஆறு மாதங்களாகப் பயன்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வந்திருக்கும் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். முழுக்க முழுக்க மத்திய அரசு நிதியில் வாங்கப்பட்டுள்ள இந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை, மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் உள்ளது எனும் காரணத்துக்காக, திறனற்ற திமுக அரசு முடக்கி வைத்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. 

அற்ப அரசியலை காட்ட வேண்டாம்

கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களைப் பயன்படுத்தாமல் முடக்கி வைத்திருப்பதன் மூலம், கால்நடைகளுக்கான அவசர மருத்துவ உதவி கிடைக்காமல், விவசாயிகள் மற்றும் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு.உடனடியாக, அனைத்து கால்நடை ஆம்புலன்ஸ் வாகனங்களையும் மாநிலம் முழுவதும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்றும், அற்ப அரசியலை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் காட்ட வேண்டாம் என்றும், தமிழக அரசை வலியுறுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

பகையாடி கெடுக்க முடியாவிட்டால், உறவாடிக் கெடு.! இதைத்தான் கர்நாடக துணை முதல்வர் கையில் எடுத்துள்ளார்- அன்புமணி