கொடியேற்றத்துடன் தொடங்கிய பங்குனி உத்திர திருவிழா..புகழ்பெற்ற ஆழித்தேரோட்டம் தேதி அறிவிப்பு..
உலக புகழ்பெற்ற ஆசியாவிலேயே மிகப் பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேர் தேரோட்டம் மார்ச் 25 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி உத்திர திருவிழாவின் நிறைவாக ஆழித்தேரோட்டம் நடைபெறும்.இந்த தேர் ஆசியாவிலேயே மிகப் பெரிய தேராகக் கருதப்படுகிறது.ஆழித்தேர் என்று அழைக்கப்படும் இது 96 அடி உயரமும் 31 அடி அகலமும் சுமார் 300 டன் எடை கொண்டது. இந்த தேர் முழுவதுமாக அலங்கரிக்கப்படும்போது 400 டன் எடை கொண்டதாக இருக்கும், இதன் நான்கு இரும்புச் சக்கரங்களிலும் ஹைட்ராலிக் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. பிரமாண்டமான இந்த ஆழித்தேர், தியாகராஜர் உடன் நான்கு வீதிகளிலும் வீதியுலா வரும்.
இந்தாண்டு திருவாரூர் தியாகராஜர் கோயில் கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.பங்குனி உத்திரப் பெருவிழா கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.இதில் சந்திரசேகரர், சண்டிகேஸ்வரர், அம்பாள், விநாயகர், முருகன் ஆகியோர் தேரோடும் வீதிகளில் கொடிச் சீலையை எடுத்துக் கொண்டு வீதி உலா வந்தனர். பின்னர், இவர்கள் தியாகராஜர் சன்னதி கொடிமரம் முன்பு நிறுத்தப்பட்டனர்.
பின்னர், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில் கொடிமரத்துக்குச் சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து ரிஷப உருவம், திரிசூலம், மங்கலச் சின்னங்கள் வரையப் பெற்ற கொடியானது,வேத மந்திரங்கள், ஆரூரா, தியாகேசா எனும் பக்த கோஷங்கள் முழங்கக் கொடியேற்றம் நடைபெற்றது. அப்போது கோவில் கோபுரங்களிலிருந்து மலர்களைத் தூவி கொடியேற்ற விழா வெகு விமரிசையாக நடைபெற்றது
கொடியேற்றப்பட்டதை அடுத்து, திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளதாக முறைப்படி அறிவிக்கப்பட்டது. முன்னதாக நேற்றைய தினம் மருதப்பட்டினம் அருள்மிகு அபிமுக்தீஸ்வரர் கோயிலுக்கு சண்டிகேஸ்வரர் சென்று, அங்கிருந்து புனித மண் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துக்கு வருமாறு அனைவரையும் அழைக்கும் வகையில், அப்பர் சுவாமிகள் தேரோடும் வீதிகளில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தேரின் கட்டுமானத்திற்கு பயன்டுத்தப்படும் மரங்கள், துணி, அலங்கார பொருட்கள்,குதிரைகள் என அனைத்தும் பிரம்மாண்ட வகையில் பல்வேறு இடங்களில் இருந்து வரவழைக்கப்படும். தேரோட்டத்தின் பொழுது தேரை இயக்கவும் கட்டுப்படுத்தவும் புல்டோசர், ஜேசிபி பயன்படுத்தப்படும். மேலும் வடக்கயிறின் எடையே 15 டன் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.