பாதிக்கப்பட்ட இளைஞர் புலம்பெயர் தொழிலாளி இல்லை. அவர் 2 மாதங்களுக்காக தமிழகம் வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்.

திருத்தணியில் ஒடிசாவை சேர்ந்த சுராஜ் என்ற தொழிலாளி மீது சிறுவர்கள் நடத்திய தாக்குதல் தமிழகம் முழுவதும் பெரும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சுராஜ் சென்னையில் இருந்து திருத்தணிக்கு மின்சார ரயிலில் பயணம் செய்தபோது 4 சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளை எடுத்து அவரை வெட்டுவது போல மிரட்டி ரீல்ஸ் எடுத்துள்ளனர்.

வடமாநில இளைஞர் மீது கொடூர தாக்குதல்

தொடர்ந்து அவர் திருத்தணி ரயில் நிலையத்தில் இறங்கியபோது அவரை விடாமல் துரத்திச் சென்ற சிறுவர்கள் அந்த இளைஞரை சரமாரியாக வெட்டி அதை ரீல்ஸ் எடுத்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டனர். இதில் படுகாயம் அடைந்த சுராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். சிறுவர்கள் கஞ்சா போதையில் வெறியாட்டம் போட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அஸ்ரா கார்க் விளக்கம்

இந்த நிலையில், வடமாநிலத்தவர் என்பதால் சிராஜ் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? சிறுவர்களின் கொடூர செயலுக்கான பின்னணி என்ன? என்பது குறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அஸ்ரா கார்க், ''வடமாநில இளைஞரை 4 சிறுவர்கள் பட்டாக்கத்தியை வைத்து வெட்டி அதை ரீல்ஸ் எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட 4 சிறுவர்கள் மீதும் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வடமாநிலத்தவர் என்பதால் தாக்குதலா?

இதில் 3 பேர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். ஒருவர் நீதிமன்ற அறிவுறுத்தலின்பேரில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். வடமாநிலத்தவர் என்பதால் அவர் தாக்கப்பட்டதாக கூறுவது தவறாகும். முறைத்து பார்த்ததால் இந்த தகராறு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் புலம்பெயர் தொழிலாளி இல்லை. அவர் 2 மாதங்களுக்காக தமிழகம் வந்துள்ளார். பல்வேறு இடங்களுக்கு ரயிலில் பயணம் செய்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளார்.