காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த திருடர்கள் விளக்குகளை எரிய விட்டும், டிவி பார்த்துக் கொண்டும் சாவகாசமாக பீரோவை உடைத்து திருட முயன்றதை பார்த்த மக்கள் அவர்களை வீட்டிற்குள்ளேயே பூட்டி சிறைவைத்த காவல்துறையினரிடம் மாட்டிவிட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம், படப்பையை அடுத்த ஒரத்தூர் ஊராட்சிக்கு உள்பட்டது நீலமங்கலம். இந்தப் பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். 

ஆடிட்டரான இவர், தனது குடும்பத்தினருடன் கடந்த திங்கள்கிழமை டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துவிட்டு வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு கூறிச் சென்றுள்ளார். 

இதனை எப்படியோ அறிந்து கொண்ட கொள்ளையர்கள் இருவர் ஆடிட்டர் சீனிவாசனின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர். மின் விளக்குகளை எரிய விட்ட அவர்கள், டிவி பார்த்துக் கொண்டே சாவகாசமாக பீரோவை உடைத்து திருட முயன்றுள்ளனர். 

மின் விளக்கு எரிவதைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், சீனிவாசனின் வீட்டிற்குள் எட்டிப் பார்த்துள்ளனர். அப்போது இருவர் பீரோவை உடைக்க முயற்சி செய்வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பின்னர், வீட்டை வெளியே வேறொரு பூட்டைப் போட்டு பூட்டி கொள்ளையர்களை சிறைபிடித்தனர். அதன்பின்னர், மணிமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த காவலாளர்கள் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்த் (27), செம்மஞ்சேரியைச் சேர்ந்த ரமேஷ் (41) என்பது தெரிய வந்தது. பின்னர், இருவரையும் கைது செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து சிறையில் அடைத்தனர். 

கொள்ளையர்களை வீட்டிற்குள் பூட்டி சிறைபிடித்த மக்களை காவல் துறையினர் வெகுவாக பாராட்டினர்.