பொது வாழ்க்கையில் இருந்து ஜெயலலிதாவை ஒழித்துக் கட்டுவதற்காக, தமிழக சட்டப்பேரவையிலும், பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றவரை லாரி ஏற்றிக்கொல்ல முயன்றார்கள் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி, நலத்திட்ட விழா மதுரை டி.எம். நீதிமன்றத்தின் அருகே நேற்று நடைபெற்றது இந்த விழாவில் தமிழக கூட்டுற்வுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது பேசிய அவர், மறைந்த ஜெயலலிதா அவர்கள் புதுமைப் பெண்ணாக திகழ்ந்தார். ஆண்கள் மட்டுமே இயங்கக்கூடிய அரசிய்ல துறையில், பெண்ணாக இருந்து சாதித்துக் காட்டிய பெருமை ஜெயலலிதாவையே சாரும் என்றார்.

அப்படிப்ட்டவரை பொது வாழ்வில் இருந்து தீர்த்துக்கட்ட முயன்றவர்கள் உண்டு. சட்டப்பேரவையிலும் சரி, பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்ளச் சென்ற ஜெயலலிதாவை லாரி ஏற்றிக் கொல்ல முயன்றபோதும் சரி அவற்றையெல்லாம் அவர் ஒரு பொருட்டாக கருதியதில்லை என்று கூறினார்.

முல்லை பெரியாறு அணையில் தமிழகத்தின் உரிமையைக் காப்பாற்றுவதற்காக, திமுக ஆளுங்கட்சியாக இருந்த சமயத்தில், ஜெயலலிதா தலைமையிலான அதிமுக மிகப்பெரும் போராட்டங்களை பல்வேறு மாவட்டங்களில் நடத்தியது. அது போன்ற பெரும் போராட்டம் மதுரையில் நடந்தது. மதுரையில் இருந்து உயிரோடு திரும்ப முடியாது என்று எச்சரித்து 19 மிரட்டல் கடிதங்கள் வந்தன.

மனித வெடிகுண்டாக மாறி கொலை செய்வோம் என்றெல்லாம் அன்றைய ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் மிரட்டினார்கள். ஆனால், காவல்துறை அவர்கள் மீதெல்லாம் கொஞ்சம்கூட நடவடிக்கை எடுக்கவேயில்லை என்றார்.

ஜெயலலிதா அதனை துச்சமெனக் கருதி, என்னுடைய உயிர் தமிழக மக்களுக்காக, அதிலும் குறிப்பாக மதுரை மக்களுக்காகப் போவதென்றால் போகட்டும் என்று கூறி போராட்டத்தை பெரும் வெற்றி போராட்டமாக மாற்றிக் காட்டியவர்.

ஆண்களுக்கு நிகராக பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்ட பல்வேறு முடிவுகளை மேற்கொண்டார். அதில் ஒன்றுதான் பெண்கள் சுய உதவிக்குழுக்கள். அதனை தமிழ் நாடு முழுவதும் உருவாக்கி மாபெரும் வெற்றி கண்டவர். பெண்களின் பிரச்சனைகளைக் காவல்துறையால் தீர்த்துவைக்க முடியாது என்பதை உணர்ந்து, அனைத்து மகளிர் காவல்நிலையங்களை உருவாக்கியவர் ஜெயலலிதா. இந்த முயற்சியை இந்தியாவே பாராட்டியது என்றார்.

பதினொன்று மொழிகளில் மிக சரளமாக உரையாடக்கூடியவர் ஜெயலலிதா என்றும் அவரது ஆங்கிலப் புலமைக்கு நிகரான தலைவர்கள் யாரும் தமிழ்நாட்டில் கிடையாது என்றும் செல்லூர் ராஜூ கூறினார்.