there will be heavy rain says MET
வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் என்றும், உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் அக்கினி வெயில் படிப்படியாக குறைந்து வருகிறது, தென் மேற்கு பருவ மழைக் காரணமாக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்படுகிறது. இதே போல சிலதினங்களுக்கு முன்பு வெப்ப சலனம் காரணமாக சென்னையில் பரவலாக மழை பெய்தது, இந்நிலையில் வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை ஆய்வு மையம் அதிகாரிகள் கூறியதாவது; ஆந்திரா மற்றும் ஒரிசாவை ஒட்டியுள்ள மத்திய மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ளதால் இது மேலும் வலுவடைந்து வடக்கு திசை நோக்கி செல்லும் எனவும், கடலில் ஏற்படும் இந்த மாற்றத்தால் மழை மேகங்கள் உருவாகி தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
