தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து விட்டதாக பிரதமர் மோடி அபாண்டமாக அவதூறு பரப்பியுள்ளார். உத்தரபிரதேசம், மணிப்பூர் மூலம் தான் போதைப்பொருள் பரவுகிறது என ஆதாரத்துடன் செய்தி வருகிறது.
தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் திமுக சார்பில் 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' டெல்டா மண்டல மகளிரணி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடியையும், அதிமுக, பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயக கூட்டணியையும் கடுமையாக விமர்சித்தார்.
இதுதான் பாஜக அரசின் லட்சணமா?
இது தொடர்பாக மாநாட்டில் பேசிய முதல்வர் ஸ்டாலின், ''தேர்தல் சீசன் என்பதால் பிரதமர் மோடி தமிழகம் வந்தார். இனியும் அடிக்கடி வருவார். தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பிரதமர் மோடி அபாண்டமாக பொய் கூறி விட்டு சென்றுள்ளார். மணிப்பூர் கலவரத்தில் பலர் கொல்லப்பட்டுள்ளனர். 3 ஆண்டுகளாக மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. இதுதான் பாஜக அரசின் லட்சணமா? உங்கள் டபுள் என்ஜின் எனும் டப்பா என்ஜின் ஏன் மணிப்பூரை காக்கவில்லை?
அமித்ஷாவின் திணிப்பால் உருவான கூட்டணி
தமிழகத்தில் போதைப்பொருள் அதிகரித்து விட்டதாக பிரதமர் மோடி அபாண்டமாக அவதூறு பரப்பியுள்ளார். உத்தரபிரதேசம், மணிப்பூர் மூலம் தான் போதைப்பொருள் பரவுகிறது என ஆதாரத்துடன் செய்தி வருகிறது. அங்கு சென்று பாருங்கள். NDA கூட்டணி ED, சிபிஐ ஆகிவற்றின் மிரட்டல்களால், உருட்டல்களால் உருவானவர்களின் கூட்டணி. அமித்ஷாவின் திணிப்பால் உருவான கூட்டணி. 2019 மற்றும் 2021ம் ஆண்டு தேர்தல்களில் மக்களின் படுதோல்வியை சந்தித்த கூட்டணி.
NDA கூட்டணி vs தமிழ்நாட்டுக்கான தேர்தல்
தோற்றுப்போன ஒரு கூட்டணியை, உடைந்ததை பழையபடி ஓட்டி புதுப்பித்து கூட்டணியை பில்டப் கொடுக்கின்றனர். மிரட்டால் உருவான பிளாக் மெயில் கூட்டணி. கட்டாயத்தால் உருவான கூட்டணி. இந்த கூட்டணி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழகத்தில் கெட் அவுட் தான். டெல்லியில் இருந்து தமிழகத்தை ஆள பாஜக நினைக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டார்கள். வரப்போகும் தேர்தல் NDA கூட்டணி vs தேசிய முற்போக்கு கூட்டணிக்கான தேர்தல் அல்ல. NDA கூட்டணி vs தமிழ்நாட்டுக்கான தேர்தல்'' என்று தெரிவித்துள்ளார்.


