தமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு புவியியல் அமைப்பு இல்லை என்று காவிரி தொடர்பான வழக்கு விசாரணையின்போது தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக 2007 ஆம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றம் அளித்த இறுதி தீர்ப்பு குறித்து தமிழகம், கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் மனு தாக்கல் செய்துள்ளன. இந்த மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது.

கர்நாடகம், கேரள அரசுகளின் வாதம் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் அடங்டிகய அமர்வு முன்பு இறுதி விசாரணை நடைபெற்று வருகிறது. 

காவிரி வழக்கில் தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய நீதி அலைகழிக்கப்படுவதாக தமிழக அரசு வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் வாதிட்டனர். இன்னும் 8 தினங்களுக்கு தமிழக அரசின் வாதங்களை தொடர்ந்து வைக்கப்படும் என தெரிகிறது.

தமிழக அரசின் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள், காவிரி மேலாண்மை வாரியம் அமைச்ச மத்திய அரசு பின்வாங்கியது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படும் என்று கூறிய மத்திய அரசு திடீரென பின்வாங்கியது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மத்திய அரசு வழக்கறிஞர்கள் தமிழகத்துக்கு உரிய விளக்கம் அளிக்க உச்சநீதிமன்றம் நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று பிற்பகல் சுமார் 3 மணியளவில் மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்டது. 

அப்போது, நீதிபதிகள், தமிழகத்தில் ஏன் புதிய அணைகளை மாநில அரசு கட்டக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழகத்தில் அணைகள் கட்டும் அளவுக்கு புவியியல் அமைப்பு இல்லை என்று தமிழக அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பதில் அளித்துள்ளனர்.

கர்நாடகம் புதிய அணைகளை கட்டும் போது தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு தமிழக வழக்கறிஞர், கர்நாடகா விதிமுறை எதையும் கடைபிடிக்காமல் அணைகளை கட்டி வருவதாக குறிப்பிட்டார்.