Asianet News TamilAsianet News Tamil

இந்த வேலையில் கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லை – ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு செவிலியர்கள் போராட்டம்…

There is no protection in this work - the nurses struggle
There is no protection in this work - the nurses struggle
Author
First Published Sep 9, 2017, 8:03 AM IST


பெரம்பலூர்

பெரம்பலூரில், செவிலியர் பணியில் பாதுகாப்பு கேட்டு ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு கிராமச் சுகாதாரச் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் அருகேயுள்ள புதுநடுவலூர் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமார் மனைவி மாரியாயி (33). இவருக்கு ஏற்கனவே ஏழு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில் கர்ப்பமடைந்த மாரியாயி கடந்த 24-ஆம் தேதி பிரசவத்திற்காக குரும்பாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் சென்றுள்ளார். அப்போது, அங்கு பணியில் இருந்த கிராம சுகாதாரச் செவிலியர் நாகவள்ளி, மாரியாயியை பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டனாராம்.

அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இருதய நோயாளி என்பதாலும், ஏற்கெனவே ஏழு குழந்தைகள் உள்ளதாலும் திருச்சி அரசு மருத்துவமனைக்கும், அங்கிருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கும் மருத்துவக் குழுவினரால் அனுப்பி வைக்கப்பட்டார்.  

இந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் இருந்து பிரசவத்திற்கு முன் மாரியாயி வெளியேறிவிட்டார். இதனையறிந்த மருத்துவமனை நிர்வாகம், பெரம்பலூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு தகவலளித்தனர். பின்னர், செவிலியர் நாகவள்ளி, மாரியாயி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, அவர் அங்கிருந்தது தெரியவந்தது.

பின்னர், மருத்துவர்களின் ஆலோசனைப்படி, அவசர ஊர்தி மூலம் சென்னை மருத்துவமனைக்கு மாரியாயி கொண்டுச் செல்லப்பட்டார். தகவலறிந்த மாரியாயியின் கணவர் குமார், சென்னை மருத்துவமனைக்குச் சென்று, அங்கிருந்த செவிலியர் நாகவள்ளியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரைத் தாக்கினார்.

இதுகுறித்து மருத்துவத் துறையினர் மூலம் காவலாளர்களுக்கு அளித்த புகாரின்பேரில், குமார் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

இச்சமயத்தில்தான் பெரம்பலூர் ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தலைமையில் மாதாந்திர ஆய்வு கூட்டம் நடைபெற இருந்தது.

இதில், 100-க்கும் மேற்பட்ட தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்கத்தினர் பங்கேற்க இருந்தனர். இவர்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்து செவிலியர்களுக்கு பணிப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஆட்சியரகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், காவலாளர்கள், அவர்களிடம் பேச்சுவார்த்தையை நடத்தி முற்றுகைப் போராட்டத்தை கைவிடச் செய்தனர். பின்னர், செவிலியர்கள் அங்கிருந்து அமைதியாக கலைந்துச் சென்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios