நித்திக்கு நித்திரையிலும் கூட இங்கே இடம் கிடையாது! மீண்டும் வம்பு, வழக்குக்கு வரும் மதுரை ஆதீன விவகாரம்!
’இவிய்ங்க சாமியாருங்களா? இல்ல காமெடி ஆசாமியாருங்களா?’ என்று தமிழ்நாட்டை தெறிக்க விடுவதில் வல்லவர்கள் மதுரை ஆதீனம் அருணகிரியும், நித்யானந்தாவும்.
நடிகை ரஞ்சிதாவுடன், மன்மத ரசனோற்தவமான சூழலில் நித்தி இருந்த வீடியோ தேசத்தையே உலுக்கியெடுத்த பின் அவரது கைது படலமெல்லாம் நிகழ்ந்ததை உலகறியும். இம்புட்டு அலும்பலுக்குப் பின்னரும் அவரை மதுரை மடத்துக்கு அழைத்து வந்து தனது இளையபட்டமாக பட்டபிஷேகம் செய்து வைத்தார் அருணகிரி நாதர்.
ஆனால் ஒண்டவந்த பிடாரி, ஊர் பிடாரியை துரத்திய ஸ்டைலில் நித்தி குரூப்போ ஆதீனத்தை அலறவிட்டது. கண்கள் ரெத்தச் சிவப்பாகுமளவுக்கு நொந்து நூலாகி, இருக்கும் நரம்புடம்பும் தேய்ந்து துரும்பாகுமளவுக்கு நூடுல்ஸானார் அருணகிரி.
அதன்பின் பல பகீரத நடவடிக்கைகளின் மூலம் நித்திக்கு பட்டாபிஷேகம் நடத்தியதை ரத்தும் செய்தவர், அந்த கோஷ்டியை மடத்தை விட்டே விரட்டினார். நித்தியை உள்ளே சேர்த்ததை எதிர்த்து சில இந்து அமைப்பு நிர்வாகிகளும், பொது நல நோக்கர்களும் கோர்ட்டுக்கு போயிருந்தனர். அப்போது அவர்களை எதிர்த்த ஆதீனம், நித்தியால் நொந்த பிறகு தானும் கோர்ட்டுக்கு போனார். ஆனால் எல்லோரையும் ஜகஜலா கில்லாடிகளாக எதிர்த்து நிற்கின்றனர் நித்தி டீமினர்.
இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பின் நித்தி பற்றி திருவாய் மலர்ந்திருக்கும் ஆதீனம்...”நித்தியானந்தாவுக்கு நம் ஆதீன மடத்தில் நுழைய அனுமதியில்லை என்று எண்டு கார்டு போட்டாகிவிட்டது. இனி எதுக்காகவும் அவர் மடத்தினுள் நுழைய கூடாது, முடியாது, அனுமதியே கிடையாது.
இளைய ஆதீனம்! என்று இனி யாரையும் கொண்டு வரும் திட்டமே இல்லை. காலத்தின் கையில் அந்த பொறுப்பை ஒப்படைத்துவிட்டேன்.
ஆதீனத்தை யாருடைய கட்டுப்பாட்டின் கீழும் கொண்டு வர சட்டத்துக்கே இடமில்லை!” என்று ஓங்கியடித்தவர், ”கடவுள்களில் ஆண் , பெண் வேறுபாடுகள் கிடையாது. அதனால் சபரிமலைக்கு பெண்கள் செல்வதில் எந்த தவறும் இல்லை.” என்று பஞ்ச் கார்டு வைத்ததுதான் ஹைலைட் இதைக் கேட்ட நபர்களோ “அதெல்லாம் சரி சாமி, உங்க செகரெட்டரி வைஷ்ணவி இப்போ எங்கே, எப்படி இருக்கிறாங்க?” கமெண்ட் அடிக்க, அதை காதிலேயே வாங்கிக் கொள்ளாமல் நகர்ந்தாராம் ஆதீனம்.