Asianet News TamilAsianet News Tamil

பா.ஜ.க-வை தமிழகத்தில் காலூன்ற வைக்க தமிழிசை தேவையில்லை, அதிமுகவே போதும் - பங்கமாக கலாய்கும் கே.பாலகிருஷ்ணன்

There is no need for Tamil Nadu to keep the BJP in the state of Tamil Nadu and most importantly - K.Balakrishnan
There is no need for Tamil Nadu to keep the BJP in the state of Tamil Nadu and most importantly - K.Balakrishnan
Author
First Published Dec 28, 2017, 8:06 AM IST


திருவாரூர்

பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் காலூன்ற வைக்க தமிழிசை செளந்தரராஜன் தேவையில்லை. அதிமுக அரசே போதும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம், ஆலங்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22-வது மாவட்ட மாநாடு நேற்று தொடங்கியது.

மாநாட்டுக் கொடியை கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினரும், மூத்த தலைவருமான எஸ். தங்கராசு ஏற்றி வைத்தார்.

இந்த மாநாட்டில்  கலந்துகொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன் பேசியது:
 
"நமது அண்டை நாடான நேபாளத்தில் நடைபெற்ற தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இடதுசாரி சக்திகள் ஆட்சியைப் பிடித்திருப்பது நமக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை காங்கிரசு அல்லது பாஜக என்று தேசிய அளவிலும் , தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அதிமுக அல்லது திமுக என்ற அளவில் மட்டுமே மாற்று சிந்தனை மக்களிடம் விதைக்கப்படுகிறது.

நம்மை பொறுத்தவரை இடதுசாரி மாற்று ஒன்றே மக்கள் பிரச்சனைக்குத் தீர்வு என முன்னெடுத்து செல்கிறோம்.

பாரதிய ஜனதாகட்சியின் பின்புலத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளது. இதன் காரணமாகவே இந்தியாவில் ஒற்றை ஆட்சி முறையைப் புகுத்த பாஜக முயற்சி எடுக்கிறது. ஆனால், இந்தியாவின் பெருமை என்பது "வேற்றுமையில் ஒற்றுமை" என்ற பன்முக கலாச்சாரத்தில்தான் உள்ளது.

பாஜக பிடியில் சிக்கிக்கொண்டு இபிஎஸ், ஓபிஎஸ் அதிமுக அரசு செயல்படுகிறது. பாரதிய ஜனதா கட்சியை தமிழகத்தில் காலூன்ற வைக்க தமிழிசை செளந்தரராஜன் போன்றவர்கள் தேவையில்லை. அதிமுக அரசே போதுமானதாகும். அந்த அளவிற்கு மாநில உரிமைகள் அனைத்தையும் விட்டுக்கொடுத்துவிட்டு, மத்திய அரசிடம் மண்டியிட்டு உள்ளனர்.

எனவே, தமிழகத்திலும் ஒரு மாற்று அரசியலை முன்னெடுத்து செல்ல வேண்டிய தொலைநோக்கு கடமை நம் முன்னே உள்ளது என்பதை உணர வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

மாநாட்டில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் பி. சண்முகம், மாநிலக் குழு உறுப்பினர் வி. மாரிமுத்து, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் சி. ஜோதிபாசு,  பி. கந்தசாமி, மாவட்டச் செயலர் ஐ.வி. நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios