தமிழகத்தில் ஆரியம், திராவிடம் கிடையாது - ஆளுநர் ரவி பேச்சு!
தமிழகத்தில் ஆரியம், திராவிடம் கிடையாது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்

திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில் மருது சகோதரர்கள் நினைவு நாள் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தின் உண்மையான வரலாற்றை அழிப்பதற்கு இங்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. உண்மையான வரலாற்றை மறைத்து அதற்கு நிகரான வரலாற்றை எழுத முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அவர்கள், தமிழகத்தில் இன ரீதியாக பிரிவினை இருப்பது போன்றதொரு தவறான தகவலை உருவாக்கினார்கள்.” என்றார்.
பிரித்தாளும் கொள்கைக்காக அனுப்பப்பட்ட ராபர்ட் கால்டுவெல்லை திராவிட கருத்தியலின் தந்தை என்று போற்றுகிறார்கள் என்று சுட்டிக்காட்டிய ஆளுநர் ரவி, தமிழகம் புண்ணிய பூமி, இங்கு ஆரியம், திராவிடம் கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் சூழ்ச்சிக்கான பிரிட்டாஷரின் உத்திகளில் இதுவும் ஒன்று என்றார். சுதந்திர தினத்தை கருப்பு நாள் எனக் கூறியவர்கள் தமிழ்நாட்டில்தான் இருக்கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் கலாச்சாரத் தூய்மையை அழிப்பதுதான் பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்த என்ற ஆளுநர், பள்ளிப்படிப்பைக் கூட முழுமையாக முடிக்காத, கல்லூரிகளில் படிக்காத ராபர்ட் கால்டுவெல், இங்கு வந்தபிறகு, மொழியியல் நிபுணராக மாறியிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது என்றும் கூறினார்.
மகாத்மா காந்தி உள்ளிட்டோர் தமிழ்நாட்டில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவராக மாற்றியிருப்போம். சுதந்திர போராட்ட தியாகிகளை மக்கள் நினைவில் இருந்து அகற்ற தமிழக அரசு முயற்சி செய்கிறது. தியாகிகளை சாதித் தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்றுபட விடாமல் தடுக்கிறார்கள் என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டினார். ஆங்கிலேய திராவிட கதையை பரப்பும் அரசியல் சதியின் காரணமாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பல தேசிய சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகள் சாதிய தலைவர்களாக சிறுமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தகுதித் தேர்வு அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: ராமதாஸ் வலியுறுத்தல்!
தமிழகத்தில் திராவிட இயக்கங்கள் பல்வேறு முன்னெடுப்புகளை இன்றளவும் மேற்கொண்டு வருகின்றன. திராவிட இயக்கங்களும், அதிலிருந்து பிரிந்த திராவிட கட்சிகளின் நடவடிக்கைகளாலேயே தமிழ்நாட்டின் முன்னேற்றம் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது அதிகமாக இருக்கிறது. அரை நூற்றாண்டு காலத்துக்கு மேலாக இரு பெரிய திராவிட கட்சிகளே தமிழ்நாட்டில் மாறிமாறி ஆட்சி புரிந்து வருவதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறி வரும் நிலையில், திமுக அரசுடன் தொடர் மோதல் போக்குகளை கையாண்டு வரும் ஆளுநர் ரவி, தமிழகத்தில் ஆரியம், திராவிடம் கிடையாது என பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு என்று சொல்வதை விடத் தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என கூறிய ஆளுநர் ரவி, சட்டப்பேரவையில் பேசிய போது ’திராவிட மாடல்’ என்ற வார்த்தையை தவிர்த்து கடும் எதிர்ப்புக்கு உள்ளானார் என்பது கவனிக்கத்தக்கது.