தஞ்சாவூர்

தஞ்சாவூரில், முதலைகள் அதிகம் வசிக்கும் வயல்களில் தண்ணீர் வறண்டு விட்டதால் தண்ணீர்த் தேடி ஊருக்குள் வந்த முதலை, ஒருவரின் வீட்டு வாசலில் படுத்துக் கிடந்தது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே வடுகக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை ஒட்டிதான் கொள்ளிடம் ஆறு செல்கிறது. தற்போது கொள்ளிடம் ஆறு வறண்டு கிடப்பதால் கொள்ளிடம் ஆற்றையொட்டி உள்ள வாய்க்கால்களும் வறண்டு விட்டன.

இந்த பகுதியில் உள்ள ஆறு, வாய்க்கால்களில் முதலைகள் அதிகமாக காணப்படும். வறட்சி காரணமாக முதலைகள் தண்ணீரை தேடி வேறு இடங்களுக்குச் சென்று விட்டன.

இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் வடுகக்குடி மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் வின்சென்ட். நேற்று காலை தனது வீட்டு வாசல் கதவைத் திறந்தவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வெளியே ஒரு முதலை கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்பு படை வீரர்களுக்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின்பேரில் நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்பு படைவீரர்கள் முதலையை கயிறு மூலமாக பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

வின்சென்டின் வீட்டு வாசலில் பிடிபட்ட அந்த முதலை 6 அடி நீளம் இருந்தது.

“வாய்க்காலில் முதலைகள் அதிகமாக வசித்து வந்ததாகவும், தற்போது கொள்ளிடம் ஆறு மற்றும் அதன் அருகே உள்ள வாய்க்கால்கள் வறண்டு விட்டதால் தண்ணீரை தேடி முதலை குடியிருப்புப் பகுதிக்குள் வந்திருக்கலாம்” எனவும் மக்கள் தெரிவித்தனர்.

வீட்டு வாசலில் முதலை படுத்திருப்பது வடுகக்குடி கிராம மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.