தேவகோட்டை,

கண்மாய் ஆக்கிரமிப்பை எதிர்த்து பெரியகோடக்குடி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தில் குடும்ப அட்டைகளை ஒப்படைத்து, உதவி ஆட்சியரின் பேச்சுவார்த்தையைக் கேட்டு அட்டைகளை திரும்ப பெற்றனர்.

தேவகோட்டை அருகே பெரியகோடக்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய கண்மாய், வண்ணான் கண்மாய் ஆகிய இரண்டு கண்மாய்கள் உள்ளன.

பெரியகோடக்குடி, சித்தானூர், வக்கனக்கோட்டை, பி.சிறுவனூர், தேரளபூர் ஆகிய கிராமங்களில் இருக்கும் 100 ஏக்கர் நிலங்கள், பாசனத்திற்கு இந்த கண்மாய்களில் வரும் நீர்வரத்தை நம்பி இருக்கின்றன. மேலும் குடிநீர் பயன்பாட்டிற்கும் இந்த இரண்டு கண்மாய்களே பிரதான நீர்நிலை.

இந்த கண்மாய்களில், அரசு கணக்கில் சுமார் 35 ஏக்கர் நிலம் இருந்துள்ளது. ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அந்த நிலத்தை சிலர் முறைகேடாக பட்டா பெற்று, அதனை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகோடக்குடி கிராமமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். கண்மாய் ஆக்கிரமிப்பு குறித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு தேவகோட்டை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

திங்கள்கிழமை இரவு, முறைகேடாக பட்டா பெற்றது மட்டுமின்றி 10–க்கும் மேற்பட்டோர் தடுப்பு கற்களை ஊன்றி வேலி அமைத்து கண்மாயை ஆக்கிரமித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பெரியகோடக்குடி கிராமமக்கள் அதனை எதிர்த்து கேள்வி கேட்டனர். ஆனால், முன்பின் எதிர்த்து கேள்வி கேட்டுப் பழக்கம் இல்லாத மக்கள், ஆக்கிரமிப்பாளர்களின் மிரட்டலுக்கு பயந்துள்ளனர். இதனால் அந்த கிராமத்தினர் தேவகோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

மேலும் இதுகுறித்து தேவகோட்டை உதவி ஆட்சியர் ஆல்பிஜான் வர்கீசை சந்தித்து உடனடியாக இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி, தங்களுக்குத் தெரிந்த முறையில் சிறிய போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

அதாங்க, குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைப்பது.

அவர்களிடம் உதவி ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கிராம மக்களிடம் கூறும்போது, “ரேஷன் கார்டுகளை திரும்ப எடுத்து செல்லுங்கள், இதுதொடர்பாக தாசில்தாரை கொண்டு விசாரணை நடத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.

இதனைத் தொடர்ந்து தங்களது குடும்ப அட்டைகளை திரும்ப எடுத்துக் கொண்டு கிராமமக்கள் அங்கிருந்து வீடு திரும்பினர்.