யு பி எஸ் சி முதல்நிலை தேர்வு.! நாடு முழுவதும் இன்று தொடங்கியது - இத்தனை லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்களா.?
1056 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கான தேர்வு நாடு முழுவதும் கட்டுப்பாட்டோடு நடைபெற்று வருகிறது.
யுபிஎஸ்சி தேர்வு தொடங்கியது
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எப்.எஸ். போன்ற குடிமைப் பணிகளுக்கு ஆண்டுதோறும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த தேர்வானது, முதல் நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகளைக் கொண்டது. அதன்படி இந்த ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. குடிமைப் பணிகளுக்கான முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்கான முதல்நிலை தேர்வு மே 26 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில்,
யு.பி.எஸ்.சி. முதல்நிலைத் தேர்வு ஜூன் 16ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், யு பி எஸ் சி முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. யுபிஎஸ்சி நடத்தும் ஐஏஎஸ்,ஐபிஎஸ் உள்ளிட்ட 24 வகையான சிவில் சர்வீஸ் பணிக்கான முதல்நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெறுகிறது.
தேர்வு எழுத 9லட்சம் பேர் விண்ணப்பம்
மேலும் இந்திய வனத்துறை சேவை பணிகளுக்கும் இன்று முதல்நிலை தேர்வு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை உட்பட 5 நகரங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1056 பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெறும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதுவதற்கு 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்.முதல்நிலை தேர்வை பொறுத்தவரை காலை 9:30 முதல் 11:30 வரை முதல்தாள் பொது அறிவு தேர்வும், பிற்பகலில் 2:30 மணி முதல் 4:30 மணி வரை திறனறி 2 ஆம் தாள் தேர்வும் நடைபெறும். தேர்வர்கள் செல்ஃபோன் எடுத்துச்செல்ல அனுமதி இல்லை.
அதேபோல பென் டிரைவ், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு உபகரணங்கள் எதுவும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. தீவிர சோதனைக்கு பிறகே தேர்வர்கள் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். தேர்வு எழுத வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.