ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றுவது தொடர்பாக ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தலைமையில் குழு அமைத்து முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்து நாள்தோறும் உயிரிழப்பு ஏற்படும் நிகழ்வு நடைபெற்றுவரும் நிலையில், தமிழக அரசு ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இணையதள சேவைகளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாள்தோறும் பன்மடங்கு அதிகரித்து வரும் நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியது. முந்தைய ஆட்சியாளர்களால் கடந்த 25-2-2021 அன்று ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகச் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தை ரத்து செய்யக் கோரி சில நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த 3-8-2021 அன்று வழங்கிய தீர்ப்பில், இச்சட்டம் போதுமான காரணங்கள் மற்றும் ஆதாரங்களின்றி பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்து, அதனை ரத்து செய்தது. மேலும், இச்சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வமான தரவுகளை விளக்கத் தவறியதாகவும் கருத்து தெரிவித்திருந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சென்னை உயர்நீதிமன்றத்தின் இத்தீர்ப்பினை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 13-11-2021 அன்று தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு இதுவரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. மேலும், கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட சட்டங்களும் அந்தந்த மாநில உயர்நீதிமன்றங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டின்பால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நேற்று (9-6-2022) நடைபெற்றது. 


இக்கூட்டத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக்கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறியவும்; இவ்விளையாட்டுகளினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராயவும்; இவ்விளையாட்டுகளை விளையாடத் தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்து, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்தவும், இரண்டு வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க ஓய்வு பெற்ற மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு. கே. சந்துரு அவர்கள் தலைமையில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் டாக்டர் திரு. சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான டாக்டர் திருமதி லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குநர் திரு. வினித் தேவ் வான்கடே, இ.கா.ப ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முடிவு செய்யப்பட்டது. மேற்குறிப்பிட்ட குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் இச்சமூகப் பிரச்சனைக்கு உடனடித் தீர்வு காண வேண்டிய அவசியம் கருதி, அவசரச் சட்டம் விரைவில் இயற்றப்படும். இதன் மூலம் இச்சட்டம் பிற மாநிலங்களுக்கும் வழிகாட்டிடும் வகையில் முன் மாதிரிச் சட்டமாக அமையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தில் கொரோனா 4 வது அலையா? கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்துக..அலறும் ஓ.பி.எஸ்