13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு சமூக முன்னேற்றத்திற்கான மாநில அரசின் விருது வழங்கப்படுகிறது. பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல், பெண் கல்வி மற்றும் பிற சாதனைகளுக்காக விருது வழங்கப்படும்.
State government awards : பெண் குழந்தைகளின் சமூக முன்னேற்றத்திற்காக சிறப்பாக பங்காற்றும் 13 வயது முதல் 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24-ல் மாநில அரசின் விருது வழங்குவதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் வரவேற்க்கப்படுகின்றது.
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களை தடுக்கவும், பெண் கல்விக்கு பாடுபட்டும், வீரதீர செயல் புரிந்த 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தேசிய பெண் குழந்தைகள் தினமான ஜனவரி -24 –ல் மாநில அரசின் விருதாக பாராட்டு பத்திரம் மற்றும் ஒரு இலட்சத்திற்கான காசோலையும் வழங்கப்படும்.
விருதிற்கான தகுதிகள்
பிற பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல்
பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு
பெண் குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் தவிர்த்தல்
வேறு ஏதாவது வகையில் சிறப்பான /தனித்துவமான சாதனை செய்திருத்தல்
பெண்களுக்கு எதிரான சமூக அவலங்கள், மூட நம்பிக்கைகள் ஆகியவற்றிற்கு தீர்வு காண்பதற்கு ஒவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாகவோ விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல் ஆண்கள் மட்டுமே சாதிக்க முடியும் என்பதை போன்ற செயல்களை பெண்களாலும் சாதிக்க முடியும் என்று சாதித்திருத்தல் மேற்காணும் தகுதிகள் கொண்ட பெண் குழந்தைகளை கண்டறிந்து முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர், காவல் துறை மற்றும் குழந்தைகளுக்காக பணிபுரியும் சிறந்த தொண்டு நிறுவனம் இவ்விருதிற்கு தகுதியான பெண் குழந்தைகளை கண்டறிந்து விருதிற்கான முன்மொழிவு மற்றும் பரிந்துரை செய்து இவ்வலுவலகத்திற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு
மாவட்ட தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு பரிந்துரைக்கப்பட்டவர்களை மாநில தேர்வுக்குழு மூலம் கூர்ந்தாய்வு செய்து தகுதியானவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். இவ்விருதிற்கு விண்ணப்பிக்க http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 29.11.2025-ற்குள் விண்ணப்பம் செய்திடுமாறும், இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் மற்றும் கையேடு தயாரிப்பு குறித்த விளக்கம் மற்றும் படிவம்-ல் பூர்த்தி செய்து உரிய கருத்துருவின் தமிழ்-3 நகல்கள் மற்றும் ஆங்கிலத்தில் கருத்துரு-3 நகல்களை மாவட்ட ஆட்சியரகம், சிங்காரவேலனார் மாளிகை, 8வது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் 01.12.2025 அன்று மாலை 4.00 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
