ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறப்புக்கு முன் முதலில் இதை செய்யுங்க.. தலைமை ஆசிரியர்களுக்கு பறந்த முக்கிய உத்தரவு
கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் வருகிற ஜூன் 6ஆம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில், பள்ளி வளாகத்தில் சுத்தம் செய்து, திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அதன் மேற்பரப்பினை மூட வேண்டும், பழைய கட்டிடத்தை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் பள்ளியின் தலைமை ஆரிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு- முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு முடிவடைந்ததையடுத்து கோடை விடுமுறை ஏப்ரல் மாதம் விடப்பட்டது. இந்த விடுமுறைக்கு பின்பு ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள்ளது. இந்தநிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதன் படி, பள்ளியிலுள்ள அனைத்து வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை. ஆய்வகம், கழிப்பறைகள் உள்ளிட்ட பிற அறைகள் மற்றும் வளாகம் நன்கு தூய்மைபடுத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்திடல் வேண்டும்.
வகுப்பறைகள், தலைமை ஆசிரியர் அறை மற்றும் பிற அறைகளிலுள்ள தளவாடப் பொருட்கள். கதவு மற்றும் ஜன்னல்கள். கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் ஆகியவை நன்கு தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும். காலாவதியான ஆய்வகப் பொருட்களை முறைப்படி பதிவேட்டில் பதிவு செய்து நீக்கம் செய்திட வேண்டும். பள்ளிக் கட்டிடத்தின் மேற்பரப்பில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக உள்ளதா என்பதையும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு முறையாக சீர் செய்யப்பட்டு பயன்பாட்டில் இருப்பதையும் உறுதி செய்திடல் வேண்டும்.
திறந்த வெளி கிணறுகள்
மாணவர் பயன்பாட்டிற்கான குடிநீர்த் தொட்டி மற்றும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி அனைத்தையும் உட்புறம் கிருமி நாசினி கொண்டு நன்கு சுத்தம் செய்து, தூய்மையாகவும் பாதுகாப்பான குடிநீர் மாணவர்களுக்கு கிடைக்கும் வகையில் உள்ளதை உறுதி செய்திட வேண்டும். சமையலறை நன்கு சுத்தம் செய்யப்பட்டும் சமையல் பாத்திரங்கள் முறையாக கழுவப்பட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்திடல் வேண்டும்.திறந்தவெளிக் கிணறுகள் இருப்பின் அதன் மேற்பரப்பினை யாரும் அணுகா வண்ணம் மூடிட நடவடிக்கை எடுப்பதுடன் பள்ளி தொடங்குவதற்கு முன்பாகவே இந்நடவடிக்கைகளை நிறைவு செய்யப்பட வேண்டும்.
கழிவுநீர்த் தொட்டிகள் மூடப்பட்டு பாதுகாப்புடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளியில் மாணவர்கள் பயன்படுத்தும் அனைத்து இடங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்தல் வேண்டும் பள்ளி வளாகத்தினுள் மாணவர்களின் முழுமையான பாதுகாப்பிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் முழுப் பொறுப்பு என்பதனை உணர்ந்து செயலாற்றிட வேண்டும். பள்ளி வளாகத்தில் பழுதடைந்த கட்டிடங்கள் அல்லது உடைந்து விழும் நிலையில் சுற்றுச்சுவர் ஏதேனும் இருப்பின், அத்தகைய கட்டிடங்களை மாணவர்கள் அணுகாத வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடல் வேண்டும்.
பழுதடைந்த கட்டிடங்கள்
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பயன்பாட்டில் உள்ள கழிவறைகளின் உள்ளேயும் வெளியேயும் கைகளை சுத்தம் செய்வதற்கு ஏற்ற வகையில் போதுமான அளவில் சோப்பு / சோப்பு கரைசல் வைக்கப்பட்டுப் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும். பள்ளியில் உள்ள அனைத்து மின்சாதனங்கள் மற்றும் மின்சுவிட்சுகள் நன்முறையில் செயல்படுகின்றதா என்பதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மூலம் உறுதி செய்திடல் வேண்டும். பள்ளி வளாகத்தினுள் அமைந்துள்ள மரங்களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டிடங்களுக்கு இடையூறாக அமைந்துள்ள கிளைகளை அகற்றிட நடவடிக்கை மேற்கொள்வதுடன் மரங்கள் எளிதில் விழாத வண்ணம் உள்ளதை உறுதிபடுத்திட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.