Annamalai : அடுத்தடுத்து இரண்டு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு..! மீண்டும் அண்ணாமலைக்கு செக் வைத்த கோவை போலீஸ்
விதிகளை மீறி மீண்டும் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்த அண்ணாமலையின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்திய நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட அண்ணாமலை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
விதியை மீறி பிரச்சாரம்
நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுதாமல் அரசியல் கட்சி தலைவர்கள் முதல் வேட்பாளர்கள் வரை வீதி வீதியாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். இந்தநிலையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு இரவு 10.40 மணியளவில் பிரச்சாரம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதனை தட்டிக்கேட்ட திமுகவினரை பாஜகவினர் கடுமையாக தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக திமுக சார்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து அண்ணாமலை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது, இந்தநிலையில் மீண்டும் பிரச்சார நேரத்தை தாண்டியும் இரவு நேரத்தில் அண்ணாமலை பிரச்சாரம் செய்ததாக கூறப்படுகிறது.
இரவு 10மணிக்கு பிறகும் பிரச்சாரம்
நேற்று இரவு சூலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்ணாமலை பிரச்சாரம் மேற்கொண்டார். இரவு 10:30 மணி அளவில் சிந்தாமணி புதூரில் இருந்து ஒண்டிப்புதூர் வரும் வழியில் அவருடன் சாலையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். இரவு 10 மணியுடன் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி இல்லை என்ற நிலையில், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் மேற்கொண்டதால் அதற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஆனால் மேற்கொண்டு ஊர்வலமாக செல்வதற்கு காவல் துறை அனுமதி மறுத்த நிலையில், வேனில் இருந்து இறங்கி வந்த பாஜக வேட்பாளர் அண்ணாமலை காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
சட்டத்தை மீறி இரவு நேரத்தில் பிரச்சாரம் மேற்கொள்ளக்கூடாது என காவல் துறையினர் உறுதியாக தெரிவித்தனர். அவர்களுடன் வாக்குவாதம் மேற்கொண்டு அண்ணாமலை ,தான் பிரச்சாரம் செய்யவில்லை என்றும், கையெடுத்து கும்பிட்டபடிதான் வந்ததாக தெரிவித்தார். ஆனால் போலீசார் அனுமதி மறுக்கவே பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ஒண்டிபுதூர் சாலையில் இரவு நேரத்தில் கடுமையான போக்குவரத்து நெரிசல் செயல்பட்டது. இது தொடர்பாக மாநில துணை வணிக அலுவலர் சண்முகப்பிரியா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் கொடுத்த புகாரின் பேரில், 143 மற்றும் 341 ஆகிய 2 பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மற்றும் 300 நபர்கள் மீது சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அண்ணாமலை மீது வழக்கு பதிவு
இதே போல அண்ணாமலை மீது மற்றொரு காவல்நிலையத்தில் 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்காநல்லூர் போலீசாரும், 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அனுமதி இன்றி ஒன்று கூடுதல், முறையற்ற தடுப்பு, வெடிபொருட்களை தவறாக கையாளுதல், பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.