திருவண்ணாமலையில் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி அளித்த புகாரி அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹரிதாஸ் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு நபர்களை சந்தவாசல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
நிலப்பிரச்சனையில் மோதல்
காஷ்மீர் பகுதியில் ராணுவத்தில் அவில்தாராக பணியாற்றி வருபவர் பிரபாகரன், இவர் நேற்று சமூக வலை தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் நிலப்பிரச்சனை தொடர்பாக தனது மனைவியை 20க்கும் மேற்பட்டவர்கள் அரைநிர்வாணம் செய்து தாக்கியதாக கண்ணீரோடு தெரிவித்திருந்தார். தனது மனைவியை காப்பாற்றுமாறு திருவண்ணாமலை மாவட்ட எஸ்பிக்கும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த மாவட்ட எஸ்பி கார்திக்கேயன் உத்தரவிட்டிருந்தார்.
கடையை காலி செய்ய சொன்னதால் ஆத்திரம்
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சந்தவாசல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி தாக்கப்பட்டது தொடர்பான சிசிடிவி காட்சியும் வெளியாகியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில், ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியின் கீர்த்தியின் தந்தை செல்வராஜ் அந்த பகுதியில் பேன்சி கடையை நடத்தி வந்துள்ளார். இந்த கடையை காலி செய்யுமாறு கடை உரிமையாளர் ராமு கூறியுள்ளார். இது தொடர்பாக இரு தரப்புக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்தநிலையில் நேற்று முன் தினம் இரு தரப்பிற்கும் இடைய வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

இரண்டு பேரை கைது செய்த போலீஸ்
இந்த பிரச்சனையின் போது கடைக்குள் புகுந்து கீர்த்தி மற்றும் அவரது தந்தையை ராமு மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜின் மகன் ஜீவா கத்தியால் ராமுவை தலையில் தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அருகில் இருந்த கடைகாரர்கள் செல்வராஜின் கடையை முற்றுகையிட்டு அங்கிருந்த பொருட்களை சாலையில் எடுத்து வீசியுள்ளனர்.இந்தநிலையில் ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் தாக்குதலில் ஈடுபட்ட ஹரிஹரன் மற்றும் செல்வராஜ் ஆகிய இரண்டு நபர்களை சந்தவாசல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் ராணுவ வீரர் மனைவியின் உறவினர்கள் மீது கொடுத்த புகாரின் அடிப்படையிலும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படியுங்கள்
