எனது மனைவியை அரை நிர்வாணமாக்கி அடித்துள்ளார்கள்..! காப்பாற்ற கோரி வீடியோ வெளியிட்டு கதறிய ராணுவ வீரர்
ராணுவ வீரர் மனைவியை அரை நிர்வாணமாக்கி மிகவும் மோசமாக அடித்து இருக்கிறார்கள். இது எந்த உலகத்தில் நியாயம் என கேட்டு தனது மனைவியை காப்பாற்ற கோரி காஷ்மீரில் பணியில் இருக்கும் இராணுவ வீரர் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு வேண்டுகோள் விடுத்திருந்தார். இந்தநிலையில் உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
நிலப்பிரச்சணை- தாக்குதல்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த படவேடு பகுதியில் இடம் தகராறு காரணமாக இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 20க்கும் மேற்பட்டோர் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியை தாக்கியதில் ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவி கீர்த்தி வேலூர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றார். இது தொடர்பாக ராணுவ வீரர் பிரபாகர் வெளியிட்ட வீடியோவில், நிலப்பிரச்சனை காரணமாக தனது மனைவியை ஏராளமானோர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ராணுவ வீரரின் மனைவி மீது தாக்குதல்
இது தொடர்பாக திருவண்ணமலை மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்துள்ளதாகவும் அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ராணுவ வீரர் மனைவியை அரை நிர்வானமாக்கி மிகவும் மோசமாக அடித்து இருக்கிறார்கள் இது எந்த உலகத்தில் நியாயம் என்று கேட்டு காப்பாற்றுமாறு கையெடுத்து கும்பிட்டு ராணுவ வீரர் கதறியுள்ளார். இந்த வீடியோ காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் படவேடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் ஆலயம் அருகே ராணுவ வீரரின் மனைவி கீர்த்தி பேன்சி ஸ்டோர் கடை நடத்தி வந்துள்ளார். இந்த கடையின் உள்ளே புகுந்த மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அறிக்கை அளிக்க எஸ்பி உத்தரவு
அப்போது 5 லட்சத்திற்கும் மேல் உள்ள பொருட்களை சூறையாடி சென்றுள்ளனர்.இதனையடுத்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை தற்போது தொடங்கியுள்ளனர்.மேலும் எதிர் தரப்பினர் மீது தாக்குதல் நடத்தியதாக கீர்த்தி மற்றும் அவருடைய சகோதரர்கள் மீதும் சந்தவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ராணுவ வீரர் பிரபாகரனின் மனைவியை தாக்கிய சம்பவத்தின் மீது உரிய விசாரணை செய்து அறிக்கை அளிக்குமாறு திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்
துரை வைகோவிற்கு சீட் ஒதுக்கும் படி திருப்பூர் துரைசாமியிடம் பேசினேனா.? மல்லை சத்யா பரபரப்பு விளக்கம்