தூத்துக்குடி,
தூத்துக்குடி தென்பாகம் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கும், கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிக்கும் தொடர்பு இருப்பதை அறிந்த டி.ஐ.ஜி., காவல் ஆய்வாளரை பணி இடைநீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
தூத்துக்குடியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கறிஞர் ரகுராம் என்பவர் கத்தியால் குத்தப்பட்ட வழக்கில், பார் கவுன்சில் உறுப்பினரான, தூத்துக்குடியைச் சேர்ந்த வழக்கறிஞர் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபு உள்ளிட்ட சிலர் மீது தூத்துக்குடி தென்பாகம் காவலாளர்கள் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர். அவர்களை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டது.
ஆனால் இதுவரை, மைக்கேல் ஸ்டானிஷ் பிரபு உள்ளிட்டோரை காவலாளர்கள் கைது செய்யவில்லை.
இந்த நிலையில், தென்பாகம் காவல் நிலையத்தில் பணியாற்றிய சில காவலாளர்கள் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபுவுடன் தொடர்பில் இருந்தது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து தென்பாகம் ஆய்வாளர் ஜோசப் ஜெட்சன் ஆழ்வார் திருநகரி காவல் நிலையத்திற்கும், உதவி ஆய்வாளர் ஜார்ஜ் புளியம்பட்டிக்கும், ராமகிருஷ்ணன் எப்போதும் வென்றான் காவல் நிலையத்திற்கும், ஏட்டு சிவசக்திவேல் குரும்பூருக்கும், தனிப்பிரிவு ஏட்டு மனோஷ் முத்தையாபுரத்துக்கும், பெண் காவலர் சகாயராணி திருச்செந்தூருக்கும் மாற்றப்பட்டனர்.
மேலும் சில காவலாளர்கள் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபுவுடன் தொடர்பில் இருப்பதாக காவல் உயர் அதிகாரிகள் விசாரிக்கும் போது தெரியவந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி வடபாகத்தில் இருந்து தென்பாகம் குற்றப்பிரிவு காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட ஆய்வாளர் சுரேஷ்குமாருக்கும், காவலாளர்களால் தேடப்பட்டு வரும் வக்கீல் மைக்கேல் ஸ்டானிஷ் பிரபுவுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதனை அறிந்த நெல்லை சரக டி.ஐ.ஜி. (பொறுப்பு) ஆனந்தகுமார் சோமானி, ஆய்வாளர் சுரேஷ்குமார்-ஐ பணி இடைநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.
குற்றவாளிகளோடு தொடர்பு வைத்திருந்த காவல்துறையைச் சேர்ந்த ஆய்வாளரை டி.ஐ.ஜி பணியிடை நீக்கம் செய்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.
