மதுரை

டாஸ்மாக் சாராயக் கடைகளின் எண்ணிக்கை குறைந்தாலும், விற்பனை குறையவில்லை. எனவே, இருக்கும் கடைகளில் அரசின் உத்தரவின்படி பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று டாஸ்மாக் சாராயக் கடை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.

மதுரை மாவட்டம், கப்பலூர் சிட்கோ பேட்டையில் மதுரை தெற்குப் பிரிவு டாஸ்மாக் சாராய கிடங்கு உள்ளது. இந்தக் கிடங்கை மையமாக கொண்டு 138 சாராயக் கடைகள் இயங்கி வந்தன.

இந்த நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவினால் இயங்கி வந்த சாராயக் கடைகள் மூடப்பட்டதால் அந்த கடைகளில் பணியாற்றி வந்த மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்கள் என 400–க்கும் மேற்பட்டோர் கடந்த ஐந்து வாரத்திற்கும் மேலாக வேலை இல்லாமல் சிரமப்பட்டனர்.

இதனிடையே கடந்த சில நாள்களுக்குமுன் பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டது. அதில், பணி மூப்பு அடிப்படையின்றி அரசின் விதிக்கு அப்பாற்பட்டு டாஸ்மாக் மாவட்ட நிர்வாகம், பணி வழங்கி ஊழியர்களை நியமித்ததாக புகார் எழுந்தது.

இதைக் கண்டித்தும், பாரபட்சமின்றி அரசு உத்தரவுபடி அனைத்துப் பணியாளர்களுக்கும் பணி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் நேற்று கப்பலூர் டாஸ்மாக் கிடங்கில் ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்த திருமங்கலம் காவல் கண்காணிப்பாளர் ரமேஷ்பாபு, காவல் ஆய்வாளர் ரவி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்தனர். போராட்டக்காரர்களிடம், போராட்டத்தைக் கைவிடுமாறு வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்களுடன் மண்டல மேலாளர் பாலசுப்பிரமணி பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.

இதுகுறித்து, தொ.மு.ச. மாவட்ட துணைத் தலைவர் செல்வம், ஏ.ஐ.டி.யூ.சி சங்க மாநில துணைத் தலைவர் பாலசந்திரன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட இணைச் செயலாளர் ராஜசேகர் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியது:

“கடைகளின் எண்ணிக்கை குறைந்தாலும் விற்பனை குறையவில்லை. சாதாரணமாக ரூ.30 ஆயிரத்திற்கு விற்பனையான அதே கடையில் தற்போது ரூ.1 இலட்சத்தில் இருந்து ரூ.5 இலட்சம் வரை விற்பனையாகிறது.

இந்த இடங்களில் அரசின் உத்தரவின்படி பணியாளர்களை கூடுதலாக நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதைக் கண்டு கொள்ளாமல் ஒரு தலைபட்சமாக நிர்வாகம் செயல்படுகிறது” என்று கூறினர்.