திண்டுக்கல்

இந்தியா முழுவதும் 2006–ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கெடுக்க இந்திய தேர்தல் ஆணையம் ஒரு புதிய செயலியை உருவாக்கி உள்ளது.

இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களில் வாக்குப் பதிவுக்கு முழுமையாக, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஊராட்சி தேர்தலுக்கு மட்டும் பழைய வாக்குச்சீட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது.

மேலும், வாக்காளர்கள் ஓட்டுப்போட்டதை உறுதி செய்து கொள்ளும் வகையில், புதிய எந்திரமும் ஒருசில தொகுதியில் மட்டும் பயன்படுத்தப்படுகிறது. அதுபோன்ற எந்திரங்களை தேவையான அளவுக்கு வாங்குவதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே பழைய எந்திரங்கள் அடிக்கடி பழுதாகி விடுகின்றன. எனவே, புதிதாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த 2006–ஆம் ஆண்டுக்கு முன்பு வாங்கப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களை கணக்கெடுக்கும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதற்காக இந்திய தேர்தல் ஆணையம் ஒரு புதிய செயலியை உருவாக்கி இருக்கிறது. அதன்படி நாடு முழுவதும் இருக்கும் அந்த எந்திரங்களை கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 2006–க்கு முன்பு வாங்கிய 640 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 640 கட்டுப்பாட்டு எந்திரங்கள் உள்ளன.

இந்த எந்திரங்களின் பின்னால் அடையாள குறியீட்டு எண், செல்போன் செயலி மூலம் ஸ்கேன் செய்யப்படுகிறது. உடனே அந்த எந்திரத்தை பயன்படுத்தத் தொடங்கிய காலம், அடையாள குறியீட்டு எண் முதலான விவரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுகின்றன. இந்தப் பணிகள் இன்று நிறைவு பெறுகிறது.