குளித்தலையில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு அளிக்கப்பட்டது.

குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடந்தது. இதில் முதல் அமர்விற்கு ஓய்வு பெற்ற நீதிபதி இரவீந்திரன் தலைமை தாங்கினார். குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி அகிலாஷாலினி உள்பட பலர் உடனிருந்தனர்.

இதில் மோட்டார் வாகன விபத்து, சிவில், மணவாழ்க்கை உள்பட பல்வேறு வழக்குகள் தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மணவாழ்க்கை வழக்குகளில் 3 கணவன் – மனைவிகள் சேர்த்து வைக்கப்பட்டனர்.

இரண்டாவது அமர்விற்கு கரூர் மாவட்ட முதன்மை உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வேலரசு தலைமை தாங்கினார். இதில் குளித்தலை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முருகானந்தி, மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி இருதயராணி உள்ளிட்டோர் இருந்தனர்.

இதில் குற்ற வழக்குகள், ஜீவனாம்சம், வங்கி காசோலை, மோட்டார் வாகன சிறு குற்றவழக்குகள் உள்ளிட்டவை தீர்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இந்த 2 அமர்விலும் பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது.

இதில் அரசு வக்கீல் நாகராஜன், வக்கீல் சங்க தலைவர் சாகுல்அமீது, வக்கீல்கள் இளஞ்செல்வன், சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.