The municipality management must pay the rent for shops according to the legal norms - Madurai High Court orders ...

மதுரை

விருதுநகர் நகராட்சி கடைகளுக்கான வாடகையை நகராட்சி நிர்வாகம் சட்ட விதிமுறைகளின்படி நிர்ணயம் அல்லது மறுநிர்ணயம் செய்ய வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

தமிழக அரசு நகராட்சி கடைகளுக்கு வாடகை நிர்ணயம் செய்து மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை தொகையை உயர்த்தி ஒன்பது வருடங்கள் வரை வாடகைதாரர் வாடகைக்கு விடப்பட்ட இடத்தில் இருக்கலாம் என்றும், அதன்பின்னர் வாடகையை மறு நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கடந்த 3.7.2007 அன்று உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, தற்போது நகராட்சிக் கடைகளுக்கான வாடகையினை மறுநிர்ணயம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நகராட்சி நிர்வாகத்தினர் நகராட்சி கடைகளுக்கு வாடகையை மறுநிர்ணயம் செய்து நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

விருதுநகர் நகராட்சி கடை வாடகைதாரர்களான கலாநிதி, சலீம்பாதுஷா, ஜாகீர்உசேன் ஆகியம் மூன்று பேரும் இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் 3.7.2007 தேதி உத்தரவின்படி விருதுநகர் நகராட்சி நிர்வாகம் கடந்த 22.5.2017 அன்று எங்களுக்கு வாடகை தொகையினை உயர்த்தி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

வாடகை தொகை உயர்வு செய்வதற்கு எவ்வித முன்னறிவிப்பு செய்யாமலும் எங்களது ஆட்சேபனைகளை பெறாமலும் வாடகை உயர்வு செய்து நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். விதிமுறைகளுக்கு முரணான வாடகை உயர்வினை ரத்து செய்ய வேண்டும்" என அவர்கள் கோரி இருந்தனர்.

இந்த மனுக்கள் நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை விசாரித்த நீதிபதி, "தமிழக அரசுக்கு நகராட்சி கடைகளுக்கான வாடகையை உயர்த்த அதிகாரம் உள்ள நிலையில் வாடகையை உயர்த்துவதற்கு முன்னர் வாடகைதாரருக்கு உரிய அறிவிப்பு செய்து இருக்க வேண்டும்" என்றும் "அவர்களது ஆட்சேபனையை பெற்ற பின்னர் சட்ட விதிமுறைகளின்படி வாடகையை உயர்த்தி இருக்க வேண்டும்" என்றும் தெரிவித்தார்.

அதனைத தொடர்ந்து நீதிபதி மகாதேவன் பிறப்பித்த உத்தரவில், "விருதுநகர் நகராட்சி நிர்வாகம் வாடகையை மறு நிர்ணயம் செய்ய அமைக்கப்பட்ட குழு மறு நிர்ணயம் செய்த கணக்கீட்டு பட்டியலை மனுதாரர்களுக்கு வழங்க வேண்டும்.

மனுதாரர்கள் இந்த உத்தரவு கிடைத்தவுடன் தங்களுக்கு உயர்வு செய்யபபட்ட வாடகை தொகையில் 50 சதவீதத்தை உடனடியாக நகராட்சி நிர்வாகத்துக்கு செலுத்த வேண்டும். அதன் பின்னர் இந்த உத்தரவு கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் நகராட்சி நிர்வாகத்திடம் எழுத்து பூர்வமாக தங்கள் ஆட்சேபனைகளை தெரிவிக்க வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் மனுதாரர்கள் 50 சதவீத உயர்வு செய்யப்பட்ட வாடகை தொகையினை செலுத்தி விட்டதை உறுதி செய்த பின்னர் மனுதாரர்கள் கொடுத்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து அடுத்த இரண்டு வாரங்களுக்குள் சட்ட விதிமுறைகள்படி வாடகை உயர்வினை நிர்ணயம் அல்லது மறுநிர்ணயம் செய்ய வேண்டும்" என்று அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.