கோவை

கோவையில், கூட்டம் குறைவாக இருக்கிறது என்று 15 தடவை இயக்கப்பட்டு வந்த பேருந்தை 7 தடவையாக குறைத்ததால், பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டம் செய்து மீண்டும் பேருந்தின் இயக்கத்தை 15 தடவையாக மாற்ற வைத்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்கு உள்பட்ட ஊராட்சி தளவாய்பாளையம். இந்த ஊராட்சியில் கரட்டுபாளையம், தளவாய்பாளையம் ஆகிய கிராமங்கள் இருக்கின்றன.

இங்கு வசித்து வரும் மக்களின் வசதிக்காக பொள்ளாச்சியில் இருந்து அர்த்தநாரிபாளையம் செல்லும் அரசு நகர பேருந்துகள் தளவாய்பாளையம், கரட்டுபாளையம், தொண்டமுத்தூர் வழியாக செல்வது வழக்கம்.

இரண்டு டவுன் பேருந்துகள் தினமும் மொத்தம் 15 தடவை இயக்கப்பட்டு வந்ததால் கிராம மக்கள் பெரிதும் பயனடைந்தனர்.

இந்நிலையில் திடீரென்று கூட்டம் இல்லை என்று கூறி, கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு இந்த நகர பேருந்தின் இயக்கம் ஏழு தடவையாக குறைக்கப்பட்டது. இதனால் பள்ளி மாண, மாணவிகள், மக்கள், தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

இதுகுறித்து போக்குவரத்து கழகத்துக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் சினம் கொண்ட மக்கள் முன்பு போலவே மீண்டும் பேருந்து இயக்க வேண்டும் என்று ஆனைமலை அருகே சமத்தூர் – தேவனூர்புதூர் சாலையில் கரட்டுப்பாளையத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் தம்பி என்கிற சண்முகம் சுந்தரம் தலைமை வகித்தார். அதனைத் தொடர்ந்து அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும், அந்த வழியாக வந்த அரசு பேருந்துகள், தனியார் பேருந்துகள் என மொத்தம் நான்கு பேருந்துகளை சிறைபிடித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஜோக்குமார், கோட்டூர் காவல் உதவி ஆய்வாளர் ராஜேந்திரபிரசாத் மற்றும் காவலாளர்கள், அதிகாரிகள், மறியலில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது மீண்டும் வழக்கம் போல் பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சிறை பிடிக்கப்பட்ட பேருந்துகளையும் விடுவித்தனர்.

இந்த சாலை மறியலால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதித்தது.