5 நாட்கள் தொடர்ந்த ஐ.டி ரெய்டு.... நடந்தது என்ன.? ஆவணங்கள் சிக்கியதா.? மார்ட்டின் குழுமம் விளக்கம்
எங்களுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது கொல்கத்தா வருமான வரித்துறை அதிகாரிகள் தானே தவிர, அமலாக்கத் துறை அதிகாரிகள் இல்லையென தெரிவித்துள்ள மார்ட்டின் குழுமம்ட வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய இந்த சோதனைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ட்டின் குழுமத்தில் ஐடி சோதனை
லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்று வருமானம் ஈட்டியதாக கோவையை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார் எழுந்தது. இதனையடுத்து சென்னை மற்றும் கோவையில் லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய 7 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சுமார் 5 நாட்கள் நடைபெற்ற சோதனை நேற்றுடன் நிறைவடைந்தது.
இந்தநிலையில் வருமான வரித்துறை சோதனை தொடர்பாக மார்ட்டின் குழுமம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், மார்ட்டின் குழும நிறுவனத்திற்கு சொந்தமான இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில் கடந்த 12 ஆம் தேதி காலை 7 மணி முதல் 16 ம் தேதி காலை 10 மணி வரை வருமான வரி சோதனை நடைபெற்றது. இந்தியா முழுவதும் உள்ள எங்களது குழும நிறுவனங்களில் அமவாக்க துறையால் சோதனை நடத்தப்படவில்லை.
அமலாக்கத்துறை சோதனை இல்லை.. வருமான வரித்துறை சோதனை
மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் இயங்கி வரும் வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்தினர். இதற்காக எங்கள் நிறுவனங்களின் அதிகாரிகள் ஒத்துழைப்பை முழுமையாக வழங்கியுள்ளனர். தொலைக்காட்சிகளில் கூறிய படி அமலாக்கத்துறையால் சோதனை நடத்தப்படவில்லை. இது தவறான செய்தி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டப்படி அந்தந்த மாநில லாட்டரி விதிகளுக்கு இணங்க, இந்தியாவில் லாட்டர் வர்த்தகத்தை ஒழுங்கமைக்கவும், நடத்தவும் மாநில அரசுகள் பெற்றுள்ள அதிகாரத்தின் படியும்,
இயற்றப்பட்ட விதிகளின்படியும், முறையாக ஒழுங்கமைக்கப்பட்டு எங்கள் நிறுவனங்கள் இந்தியாவில் மாநில அரசாங்க லாட்டரிகளை லாட்டரி வர்த்தகம் அனுமதிக்கப்பட்ட மாநிலங்களில் விற்கின்றன. மேலும் கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் இந்தியாவிலேயே அதிகமாக தனிநபர் வருமான வரியாக தோராயமாக ரூ.100 கோடியை மார்ட்டின் செலுத்தியுள்ளார். எங்களது குழும நிறுவனங்கள் ஜூலை, 2017 முதல் செப், 2023 வரை ஜி.எஸ்.டியாக ரூ.23,119 கோடிகள் மாநில, மத்திய அரசுகளுக்கு வரியாக செலுத்தியுள்ளனர்.
அவதூறு பரப்பும் செய்தி
ஆண்டுக்கு சுமார் ரூ.5,000 கோடிகளை ஜி.எஸ்.டி வரியாக செலுத்தியுள்ளனர். இதுவரை வருமான வரியாக ரூ4,577 கோடிகள் மற்றும் முந்தைய நிதியாண்டுக்கான வருமான வரியாக சுமார் ரூ.600 கோடிகளை இந்திய அரசாங்கத்திற்கு வரியாக செலுத்தியுள்ளனர். இதனை சோதனையின் போது அதிகாரிகளுக்கு உரிய முறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வருமான வரித்துறை சோதனை தொடர்பான உண்மைகளை மிகைப்படுத்தி,
தவறாக சித்தரித்து மார்ட்டின் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நிறுவனங்கள் மீதான நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் கற்பனைக்கு அப்பாற்பட்ட விபரங்களை செய்தியாக வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற செய்தி துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதோடு மட்டுமல்லாமல், மக்களிடத்தில் எங்களைப் பற்றி அவதூறு பரப்பும் விதமாக அமைந்துள்ளதாவும் மார்ட்டின் நிறுவனம் அளித்துள்ள அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்