ED, ITயை மத்திய அரசு ஏஜென்சி என்றால் தமிழக காவல்துறையினர் யாருடைய ஏஜென்சி.? நீதிபதி அதிரடி சரவெடி
மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி மறுப்பு
மது விலக்கிற்கு எதிராக பாமக தொடர்ந்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மதுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் ராணிப்பேட்டையில் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு காவல்துறையில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. ஆனால் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனையடுத்து ராணிப்பேட்டை மாவட்ட பாமக செயலாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், மதுவிற்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால் போலீசார் மோட்டார் சைக்கிள் பேரணிக்கு அனுமதி வழங்கவில்லையென கூறினார்.
தமிழக போலீஸ் யாருடைய ஏஜென்சி.?
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுவுக்கு எதிராக பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? மாரத்தான் ஓடுவதற்கும் நடப்பதற்கும் காவல்துறை அனுமதி வழங்கும்போது மதுவுக்கு எதிரான பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கினால் என்ன? எனக் காவல்துறைக்கு கேள்வி எழுப்பினார். மேலும் ஆளும் கட்சியினருக்கு மட்டும்தான் காவல்துறை அனுமதி வழங்குகிறதா? எனவும் வினவினார்.
இதனை தொடர்ந்து யாருக்காக காவல்துறையினர் உள்ளனர். ஆளுங்கட்சியினருக்காகவா அல்லது பொது மக்களுக்காகவா என்று கேள்வி எழுப்பிய நீதிபதி ஜெயச்சந்திரன், வருமான வரித்துறை அமலாக்கத்துறை ஆகியவை சோதனைக்கு வந்தால் மத்திய அரசின் ஏஜென்ட்கள் எனக் குற்றம் சாட்டும் பொழுது தமிழக காவல்துறை யாருடைய ஏஜென்டாக செயல்படுகிறது என்றும் விமர்சித்தார்.
நேரில் ஆஜராக உத்தரவு
பாமகவின் மதுவிலக்கு கொள்கை பிரச்சார பேரணிக்கு அனுமதி மறுத்தது குறித்து பதில் மனுத் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்த நீதிபதி, இதுவரை மோட்டார் சைக்கிள் பேரணிக்கு யாருக்கும் அனுமதி வழங்கவில்லை என்றால் டிஎஸ்பி நேரில் ஆஜராகி இது தொடர்பாக விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் 17 ஆம் தேதிக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் ஒத்தி வைத்தார்.
இதையும் படியுங்கள்