எண்ணூர் கடலில் கலந்த எண்ணெய் கசிவு.! மீன் சாப்பிடலாமா.? கூடாதா.? பொதுமக்கள் அச்சம்- நிபுணர்கள் கூறுவது என்ன.?
மழை வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், அந்த மழை வெள்ளத்தோடு சேர்ந்து எண்ணெய் கசிவும் ஆறு மற்றும் கடலில் கலந்ததால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எண்ணூர் மற்றும் மணலி பகுதியில் உள்ள மீனவர்களின் மீன்களை வாங்க பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் கலந்த எண்ணெய் கசிவு
மிக்ஜாம் புயல் பாதிப்பால் சென்னையில் பல்வேறு இடங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. வேளச்சேரி, பள்ளிக்கரனை, முடிச்சூர் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. இது ஒரு புறமிக்க மற்றொரு புறமான வட சென்னை மக்களை மேலும் அதிர்ச்சி அடைய வைக்கும் வகையில் மழை வெள்ளத்தோடு சேர்ந்து ஆயிலும் கலந்து வந்தது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
சிபிசிஎல் நிறுவனத்தில் ஏற்பட்ட எண்ணெய் கசிவு தான் பல வீடுகளில் உள்ளே புகுந்து அனைத்து பொருட்களையும் சீரழித்து விட்டு சென்று விட்டது. மேலும் இரு சக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களிலும் படிந்த எண்ணெய் கசிவால் பல வாகங்கள் பழுது ஏற்பட்டுள்ளது.
கடலில் கலந்த எண்ணெய்
இது மட்டுமில்லாமல் கொசஸ்தலையாற்றின் முகத்துவாரம் முதல் காசிமேடு துறைமுகம் வரை 20 சதுர கி.மீ.க்கு எண்ணெய் சேதம் பரவியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் எண்ணூர் கிரீக் பகுதியில், மிதக்கும் எண்ணெயை அகற்றும் பணியில் எண்ணெயை உறிஞ்சும் நவீன இயந்திரம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும்.
இந்த எண்ணெய் அகற்றும் பணியை விரைவுபடுத்துவதற்காக மேலும் சில எண்ணெய் உறிஞ்சும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் மிதக்கும் எண்ணெய் படிமங்களை அகற்றுவதற்கு எண்ணெய் அகற்றும் சிறப்பு இயந்திரங்கள் (Booms) கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு
இதனிடையே எண்ணெய் கசிவு கடலில் பரவியுள்ளதால் மீன்கள் இறக்கும் நிலை காணப்படுகிறது. மீன் உடலில் எண்ணெய் கசிவு சென்றிருக்குமோ என பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மீன் உணவை தவிர்த்து வருகின்றனர். மேலும் எண்ணூர், மணலி பகுதிகளை சேர்ந்த மீனவர்களும் புயலுக்கு பின் மீன் பிடிக்க செல்லவில்லை. தங்களது படகுகள் மற்றும் வலைகளும் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கும் மீனவர்கள்,
கடலில் எண்ணெய் பரவியுள்ளதால் படகுகளை இயக்குவதில் சிரமம் அடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மீன்களை தாங்களும் வாங்கி சாப்பிடவில்லையென தெரிவித்தவர்கள், தங்களது இயல்பு நிலை திரும்பு 3மாத காலம் வரை அகலாம் என கூறியுள்ளனர்.
மீன்களுக்கு ஆபத்தா.?
எண்ணெய் கசிவால் மீன்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த கடல் நிபுணர்கள், கடலில் பெட்ரோலிய வாசனையை அறிந்தவுடன் மீன்கள் வேகமாக நீந்தி இடம்பெயரும் திறன் உடையது. கசிந்த எண்ணெயும் கடலின் மேல் பரப்பில் தான் இருக்கும். அது நீரிலும் கரையாது. ஒருவேளை மீன்கள் அதை உட்கொண்டிருந்தால், அந்த மீன்கள் உடனே இறந்து விடும் என தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம் எச்சரிக்கை