The lady who came out of marriage the young girl who goes to her home
திருமணம் செய்ய மறுத்த காதலன் வீட்டின் முன்பு 2-வது நாளாகவும் இளம் பெண் போராடும் சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே எழிலூர் கீழத்தெருவை சேர்ந்தவர் இந்திரன். இவரது மகள் ரம்யா, அதே பகுதியை சேர்ந்தவர் மாதவன். இவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு கோழி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இருவரும் பக்கத்து பக்கத்து தெருக்களில் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் ரம்யாவுக்கும் மாதவனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மலர்ந்தது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இதற்கிடையே இவர்களது காதல் விஷயம் இவர்களது பெற்றோர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் இருவருக்கும் நிச்சயத்தார்த்தம் நடந்தது. வருகிற பிப்ரவரி 11-ந் தேதி நடைபெற இருந்த நிலையில் மணமகன் மாதவன் போக்கில் திடீர் மாற்றம் ஏற்பட்டு ரம்யாவை திருமணம் செய்ய மறுத்து பேசியுள்ளார்.

இந்த விஷயம் ரம்யாவின் பெற்றோருக்கு தெரிய வந்தது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து இருதரப்பினரும் பேச்சு வார்த்தை நடத்தியும் பலன் இல்லாததால் போலீசிலும் புகார் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை மணமகன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், நேற்று மாலை ரம்யா மற்றும் அவரது உறவினர்கள் மணமகன் மாதவன் வீட்டுக்கு சென்றனர். அங்கு திடீரென ரம்யா வீட்டு முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்னர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று 2-வது நாளாகவும் ரம்யா, மாதவன் வீட்டு முன்பு போராட்டத்தை போராடி வருகிறார். மணமகன் மாதவன் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கும் வரை போராடுவேன் அதுவரை இந்த இடத்தை விட்டு நகர மாட்டேன் என்று ரம்யா தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார். மேலும் அவருடன் உறவினர்களும் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
