the laborer came with petition to the collector office

சேலத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொழிலாளி ஒருவர் ஆட்சியரகத்திற்கு கோரிக்கை மனுக்களை மாலையாக போட்டுக் கொண்டு ஆட்சியரைப் பார்க்க வந்தார்.

சேலம் மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைப்பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு ஆட்சியர் சம்பத் தலைமைத் தாங்கினார்.

இந்தக் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை, உதவி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, சாதிச்சான்று, வேலைவாய்ப்பு, வங்கிக் கடன்கள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 686 மனுக்கள் பெறப்பட்டன.

இந்த மனுக்களை அது தொடர்புடைய அதிகாரிகளுக்கு வழங்கித் தீர்வு காண ஆட்சியர் உத்தரவிட்டார்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள வெள்ளாளகுண்டம் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி விஜயகுமார் (56). இவர் நேற்று ஆட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து கொண்டும், பலகையில் தண்ணீர்! தாகம் தணியுமா? என்ற வாசக பதாகையை மாட்டிக் கொண்டும் மனு அளிக்க வந்தார்.

இதனைப் பார்த்த காவலாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி மனுக்களை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து அவரை காவலாளர்கள் விசாரித்ததில் விஜயகுமார் கூறியது, “வெள்ளாளகுண்டம் பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அவதிப்படுகின்றனர். இதுகுறித்து பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, எங்கள் பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் உள்ள பகுதியில் போர்வெல் அமைத்து சீராக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இதனையடுத்து அவர் ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு அங்கிருந்துச் சென்றார்.

இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையாளர் சதீஸ், ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் விஜய்பாபு (பொது), அமுதவள்ளி (கணக்கு), மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் செல்வம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தங்கமணி, மாவட்ட சமூக நல அலுவலர் பரிமளாதேவி ஆகியோர் உடனிருந்தனர்.