சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரம்..! பள்ளியில் சாதிய பாகுபாடா..? ஆட்சியரிடம் அறிக்கை ..?
பள்ளியில் பெஞ்ச் இல்லாததால் அனைத்து மாணவர்களையும் தரையில் அமர வைத்தே வகுப்புகள் நடைபெறுவதாகவும், ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுவதாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு தின்பண்டம்
தென்காசி சங்கரன்கோவில் அருகே உள்ள பாஞ்சாகுளம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு பள்ளியில் படிக்கும் பட்டியலின மாணவர்கள் சிலர் அங்குள்ள பெட்டிக்கடையில் தின்பண்டம் வாங்குவதற்காக சென்றுள்ளனர். அப்போது அந்த கடை உரிமையாளர் உங்களுக்கு தின்பண்டம் வழங்க முடியாது.. ஊர் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் .. உங்கள் தெரு பிள்ளைகள் யாருக்கும் வழங்க முடியாது என கடைக்காரர் கூறுவது போல காட்சி ஒன்று சமூக வலை தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சி சமூகத்தில் ஜாதி ரீதியாக கொடுமை இன்றும் நடைபெறுவதை எடுத்துக்காட்டுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.
இரு தரப்புக்கு இடையே மோதல்
இதனையடுத்து மாணவர்களிடம் தின்பண்டங்கள் தரமாட்டேன் என தெரிவித்த கடைக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உத்தரவின் பேரில் கடையை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர். மேலும் அந்த பெட்டிக்கடை உரிமையாளர்களான மகேஸ்வரன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தென்காசி மாவட்டம் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், "தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் வட்டம், பெரும்புத்தூர் கிராமம், மஜரா பாஞ்சாகுளத்தில் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு யாதவர் சமுதாயம் மற்றும் பட்டியல் இன பறையர் சமுதாய மக்களுக்கு இடையே நடந்த பிரச்சனை தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கானது இன்று வரையிலும் நிலுவையில் உள்ளது. இதன் காரணமாக இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளியில் சாதி பாகுபாடு இல்லை
இதை போல பள்ளியிலும் மாணவர்களுக்கு சாதிய கொடுமை நடத்தப்படுவதாக புகார் எழுந்தது. இந்த புகார் தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் அறிக்கை அளித்துள்ளார். அதில் சிறுவர்களுக்கு தின்பண்டம் வழங்க மறுத்த விவகாரத்தில் மாணவர்கள் படிக்கும் பள்ளியில் சாதிய பாகுபாடு இல்லை இல்லையென்று தெரிவித்துள்ளார். மேலும் பள்ளியில் பெஞ்ச் இல்லாததால் அனைத்து மாணவர்களையும் தரையில் அமர வைத்தே வகுப்புகள் நடைபெறுவதாக ஆசிரியர்கள் விளக்கம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான உணவே வழங்கப்படுவதாக சத்துணவு அமைப்பாளரும் விளக்கம் அளித்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்