The GST has a high tax on essential goods and low taxes for luxury goods
மதுரை
ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார், ஏ.சி. போன்ற ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிப்பு குறைவாக உள்ளது” என்று தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத் தலைவர் பெரீஸ் மகேந்திரவேல் தெரிவித்தார்.
தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ‘ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் சிறு, குறு தொழில்களின் தாக்கம் எப்படி இருக்கும்? அதனை எதிர்கொள்வது எப்படி? என்பதை விளக்கும் வகையில் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைப்பெற்றது.
கீழமாசி வீதியில் உள்ள தமிழ்நாடு உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் பெரீஸ் மகேந்திரவேல் தலைமை வகித்தார்.
மடீட்சியா முன்னாள் தலைவர் ஞானசம்பந்தன் வரவேற்றார். கௌரவ செயலாளர் வேல்சங்கர் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு உணவுபொருள் வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயபிரகாசம் சிறப்புரை ஆற்றினார். சுதேசி விழிப்புணர்வு இயக்க அகில இந்திய இணை அமைப்பாளர் ஆடிட்டர் சுந்தரம், ஜி.எஸ்.டி. குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பெரீஸ் மகேந்திரவேல் பேசியது:
“ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை வரவேற்க கூடியதாகும். இந்தப் புதியத் திட்டத்தால் சிறு, குறு தொழில்கள், தொழிலாளர்கள் பாதிக்காத வகையில் இருக்க வேண்டும்.
ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிப்பது சிறு, குறு தொழில்களும், தொழிலாளர்களும் தான். எனவே அவர்களை பாதிக்காத வகையில் எந்த ஒரு திட்டமும் செயல்படுத்த வேண்டும்.
ஜி.எஸ்.டி.யில் பல பொருட்களுக்கு வரி விகிதமும், சரியான விளக்கமும் இல்லாமல் இருக்கிறது. 50 கிராமிற்கு கீழ் உள்ள ஊறுகாயிற்கு இதுவரை வரி இல்லை. ஆனால், ஜி.எஸ்.டி.யால் 18 சதவீதம் வரி வருகிறது.
இதுபோல் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் கார், ஏ.சி. போன்ற ஆடம்பர பொருட்களுக்கு வரி விதிப்பு குறைவாக உள்ளது” என்றார்.
கூட்டத்தின் முடிவில் தமிழ்நாடு உள்ளூர் சிறு, குறு தொழில் நல கூட்டமைப்பின் பொருளாளர் பாண்டி நன்றித் தெரிவித்தார்.
