சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்.? இது தான் காரணம்- ஆளுநர் ரவி விளக்கம்
தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரை தொடங்கிய சிறிது நேரத்தில் அவர் வெளியேறினார். தேசிய கீதம் பாடாதது குறித்து ஆளுநர் அதிருப்தி தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு இன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. அதன் படி காலை சட்டப்பேரவைக்கு வந்த ஆளுநருக்கு பேண்டு வாத்தியம் முழங்க போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்ட்டது. இதனையடுத்து தனது உரையை வாசிக்க சென்ற ஆளுநர் சிறிது நேரத்தில் சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார். இது தொடர்பாக சமூகவலைதளத்தில் ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிவிப்பில், தமிழக சட்டசபையில் இன்று மீண்டும் பாரத அரசியலமைப்பு மற்றும் தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கீதத்தை மதிக்க வேண்டும் என்பது நமது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள முதல் அடிப்படைக் கடமையாகும்.
இது ஜனாதிபதியின் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் பாராளுமன்றத்தில் பாடப்படுகிறது அல்லது இசைக்கப்படுகிறது. இதேபோல் அனைத்து மாநில சட்டமன்றங்களிலும் ஆளுநர் உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் தேசிய கீதம் பாடப்படுகிறது. இன்று ஆளுநர் மாளிகைக்கு வரும்போது தமிழ்த்தாய் வாழ்த்து மட்டும் பாடப்பட்டது.
ஆளுநர் மாளிகையின் அரசியலமைப்பு கடமையை மரியாதையுடன் நினைவூட்டியதுடன், தேசிய கீதத்தைப் பாடுவதற்காக அவைத் தலைவர் மற்றும் சபாநாயகர், முதலமைச்சர் அவர்களுக்கு உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார். ஆனால், அவர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இது மிகவும் கவலைக்குரிய விஷயமாகும். அரசியல் சாசனம் மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது என, கவர்னர் கடும் வேதனையுடன் சபையை விட்டு வெளியேறினார் என அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.