The Government of Tamil Nadu has increased the quality of education to students to get higher education - MLA says ...

வேலூர்

உயர் கல்வி பெறும் வாய்ப்புகளை அனைத்து மாணவ, மாணவியரும் பெறும் அளவிற்கு கல்வித் தரத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது என்று எம்எல்ஏ சு.ரவி தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை அடுத்த தணிகைபோளூர் அரசினர் உயர்நிலைப் பள்ளியில் ரூ.86 இலட்சம் நபார்டு நிதியில் ஆறு வகுப்பறைகள் மற்றும் ஆய்வகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளன.

இந்தக் கட்டடத்தை காணொலி காட்சி மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து நேற்று திறந்து வைத்தார்.

இதனையொட்டி பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, பெற்றோர் - ஆசிரியர் கழகத் தலைவர் பிரகாஷ் தலைமைத் தாங்கினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் புண்ணியகோட்டி வரவேற்றார்.

இதில் கலந்து கொண்ட அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி பேசியது: “தற்போது தமிழக அரசு இரு துறைகளுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு மட்டும் எப்போதுமே அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் ஆய்வகத்துடன் கூடிய புதிய கட்டடங்கள் கட்டித் தரப்பட்டுள்ளன. மேலும், தொடக்கப் பள்ளிகளில் இருந்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்ச்சிப் பெற்று, இதே பகுதியில் உள்ள அரசுக் கல்லூரிகளில் நேரடியாக மாணவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.

உயர் கல்வி பெறும் வாய்ப்புகளை அனைத்து மாணவ, மாணவியரும் பெறும் அளவிற்கு கல்வித் தரத்தை தமிழக அரசு உயர்த்தியுள்ளது” என்று அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் அரக்கோணம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் கோவிந்தசாமி, ஆனந்தன், தாஸ், காவேரிபாக்கம் ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் பழனி, பால்ராஜ், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் தருமன் மற்றும் நாகராஜன், கலைமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.