கரூர்

மரபணு மாற்றப்பட்ட விதைகளால் தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் ஆண்கள் ஆண்மையை இழப்பதற்கும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது என்பதால் அவற்றை தடை செய்ய வேண்டும் என்று விவசாய சங்க தலைவர் ஐயாக்கண்ணு தெரிவித்தார்.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டு விவசாயம் செய்வதை தடை செய்ய கோரியும், மரபணு விதைகளுக்கு எதிராகவும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஐயாக்கண்ணு, கன்னியாகுமரி முதல் சென்னை கோட்டை வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு வருகிறார். 

அதன்படி, நேற்று 10-வது மாவட்டமாக கரூருக்கு ஐயாக்கண்ணும், அவருடன் விவசாயிகளும் வந்தனர். அவர்கள் கரூர் ஆட்சியர் அன்பழகனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். 

அந்த மனுவில், “மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய வேண்டும்.

மாநில அரசு அனைத்து விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். 

ஆறுகளில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். 

ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். 

மத்திய அரசு நதிகளை இணைத்து அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை தமிழகத்திற்கு திருப்பிவிட வேண்டும். 

கூட்டுறவுச் சங்கங்களில் அனைத்து விவசாயிகளுக்கும் கடன் வழங்க வேண்டும். 

60 வயதை கடந்த விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் ரூ.5000 வழங்க வேண்டும்” போன்றவற்றை வலியுறுத்தி இருந்தனர். 

அந்த மனுவைப் பெற்ற ஆட்சியர் அன்பழகன் அதனைச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாக தெரிவித்து உறுதியளித்தார்.

அதன்பின்னர், ஐயாக்கண்ணு செய்தியாளர்களிடம் பேசினார். அதில், "மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை உண்பதால் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும். ஆண்கள் ஆண்மையை இழப்பதற்கும், பெண்கள் கருத்தரிக்கும் வாய்ப்பை இழப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

மரபணு மாற்றப்பட்ட விதைகளை தடை செய்ய கோரி, மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி வருகிறோம். இதுவரை ஒன்பது மாவட்டங்களில் 5 இலட்சம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளன. மேலும், 25 இலட்சம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்க உள்ளோம். 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று, ஆட்சியர் மற்றும் மக்களை சந்தித்து கோரிக்கைகள் தொடர்பாக வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியரிடம் கொடுக்கும் மனுக்களை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்ல அறிவுறுத்தி உள்ளோம்.

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் டெல்லியில் பிரதமர் வீட்டு முன்பு போராட்டம் நடத்தப்படும். 

பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசை அரசியல் சாசனப்படி கலைக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.