வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி.. மகிழ்ச்சி செய்தி சொன்ன வனத்துறை !
Velliangiri Hills : கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும் என்றும், எனவே மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்தது.
வெள்ளியங்கிரி மலை கோயம்புத்தூரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் ஆகும். கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை தென்கயிலை என்று அழைக்கப்படும் ஒரு புனிதத் தலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் இருந்து வருகிறது. இது மேகங்களும் சூழ, வெள்ளி வார்ப்படத்தால் மூடியது போல தோற்றமளிப்பதால் ‘வெள்ளியங்கிரி’ என்ற பெயர் பெற்றது.
இந்த மலையடிவாரம் பூண்டி என அழைக்கப்படுகிறது. சுமார் 3500 அடி உயரமுடையது. அதாவது கடல் மட்டத்திலிருந்து 5000 அடி ஆகும். இம்மலை ஏழு சிகரங்களைக் கொண்டுள்ளது. ஐந்தரை கிலோ மீட்டர் தூரம் செல்லும் இப்பாதையில் வெள்ளை விநாயகர் கோயில், பாம்பாட்டி சுனை, கைதட்டி சுனை, சீதைவனம், அர்ச்சுனன் வில், பீமன் களி உருண்டை, ஆண்டி சுனை போன்ற இடங்கள் உள்ளிட்டவை உள்ளன.
இங்கு கோவை மட்டுமின்றி, தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து மலையில் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் வரை கோவிலுக்கு பக்தர்கள் மலையேற அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பக்தர்கள் தினமும் மலையேறி வருகின்றனர். திடீரென மலையேற்றத்திற்கு தடை விதித்தது வனத்துறை. கோடை வெயில் அதிகமாக இருப்பதால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும் என்றும், எனவே மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வனத்துறை அறிவித்தது.
இது வெள்ளியங்கிரி பயணம் செய்யும் பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து இந்து அமைப்புகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இந்த சூழலில், வெள்ளியங்கிரி மலை ஏறுவதற்கு விதிக்கப்பட்ட தடையை வனத்துறை திரும்பப்பெற்றுள்ளது. மலையேற்றத்திற்கு எந்தவித தடையும் இல்லை என்று வனத்துறை அறிவித்ததை தொடர்ந்து பக்தர்கள் மலை ஏற தொடங்கி உள்ளனர்.இந்த செய்தி பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க : "இந்து சக்தி.. அடிபணிந்த அரசு..!" ஆதீன விவகாரத்தில் மார்தட்டும் ஹெச். ராஜா