OOTY : ஊட்டிக்கு டூர் போறீங்களா.? இந்த முக்கியமான இடத்திற்கு செல்ல தடை.! எத்தனை நாட்களுக்கு தெரியுமா.?
ஊட்டியில் முக்கியமான சுற்றுலா இடமான தொட்டபெட்டாவிற்கு 3 நாட்கள் செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது. இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்தோடு திரும்பி வருகின்றனர்.
உதகையில் சீரமைப்பு பணி
கோடை வெயிலின் தாக்கத்தை சமாளிக்க ஊட்டி, கொடைக்கானல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் ஏராளமானோர் சென்று மகிழ்ந்தனர். தற்போது பள்ளிகள் தொடங்கியுள்ள நிலையில், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் பெரிய அளவில் கூட்டங்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. இதனால் ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகளை வனத்துறை மற்றும் சுற்றுலா துறை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் ஊட்டியில் முக்கியமான சுற்றுலா தலமான தொட்டபெட்டாவில் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இயற்கையின் அழகு கொண்ட நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் கோடை சீசன் நிலவி வருகிறது.
தொட்ட பெட்டா அழகை ரசிக்கும் சுற்றுலா பயணிகள்
கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்றான உதகை தொட்டபெட்டா சிகரத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தமிழகத்தில் மிக உயரமான மலை சிகரமான தொட்டபெட்டா சிகரத்திற்கு வருகை புரிந்து இங்குள்ள இயற்கை காட்சிகளையும் மலைமுகடுகளையும் சமவெளி பிரதேசங்களையும் ரசித்து புகைப்படம் மற்றும் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்து செல்கின்றன
தெட்டபெட்டாவிற்கு செல்ல தடை
இந்நிலையில் உதகை தொட்டப்பெட்டா காட்சிமுனை செல்லும் சாலையில் நுழைவு சீட்டு வசூலிக்கும் கட்டத்தின் இறுதி கட்ட கட்டுமானப் பணிகள் நடந்து வருவதால், இந்த சாலை 19.06.2024 முதல் 21.06.2024 வரை தற்காலிகமாக மூடப்படும் எனவும், மேற்கண்ட நாட்களில் தொட்டப்பெட்டா காட்சிமுனை சாலை செல்லும் சுற்றுலா பயணிகளுக்கும், வாகனங்களுக்கும் தற்காலிகமாக தடைவிதிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.