திருச்சியில் பிணம் போல ஒருவரை நாற்காலியில் உட்கார வைத்து, “வயல்கள் காய்ந்து போய்ச்சு, அதனால உயிரே போச்சு” என்று விவசாயிகள் ஒப்பாரி வைத்து விநோத போராட்டம் நடத்தினர்.

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த வீரப்பூரில் உள்ள பேருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விநோத போராட்டம் நடைபெற்றது,

இந்த போராட்டத்திற்கு வையம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் மாணிக்கம் தலைமை தாங்கினார்.

“அனைத்து வங்கிகளிலும் உள்ள விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும்,

தேசிய நதிகளை இணைக்க வேண்டும்,

விவசாயிகளுக்கு உடனடியாக வறட்சி நிவாரணம் வழங்கிட வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

அப்படி என்ன விநோதப் போராட்டம் என்று கேட்கீறீர்களா? போராட்டத்தின் தொடக்கத்தில் பிணம் போல ஒருவரை வாய் மற்றும் கைகளை கட்டி மாலை அணிவித்து அவரை தூக்கி வந்து நாற்காலியில் உட்கார வைத்தனர். அதைத் தொடர்ந்து இறந்தவருக்குச் செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளைச் செய்தனர்.

பின்னர் ஒவ்வொருவராக நாற்காலியில் பிணம் போல அமர வைத்திருந்தவருக்கு மாலை அணிவித்து கதறி அழுதனர். அங்கிருந்த பெண்கள் “வயல்கள் எல்லாம் காய்ந்து போய்ச்சு, அதனால உயிரே போச்சு” என்று அழுதனர்.

அதனைத் தொடர்ந்து அங்கிருந்த பெண்கள் பலரும் விவசாயிகளின் நிலை குறித்தும், விவசாயிகளின் கோரிக்கை குறித்தும் எடுத்துக் கூறி ஒப்பாரி வைத்தனர்.

இதே போல் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க நிர்வாகிகள் கோரிக்கைகள் குறித்து கோஷங்களும் எழுப்பினர். இந்த நூதன போராட்டத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் செந்தில்குமார், மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி, ஒன்றியத்தலைவர்கள் வையம்பட்டி கிருஷ்ணமூர்த்தி, மணப்பாறை செல்லதுரை, ஒன்றியச் செயலாளர் கண்ணுசாமி, வையம்பட்டி ஒன்றிய தே.மு.தி.க செயலாளர் அர்ச்சுணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.