Lok Sabha Election : தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடக்குமா.?? பாஜகவினருக்கு ஷாக் கொடுத்த தேர்தல் ஆணையம்
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், தமிழகத்தில் எந்த மக்களவைத் தொகுதிக்கும் மறு தேர்தல் நடத்த பரிந்துரைக்கவில்லை என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.
மறு தேர்தல் கோரிக்கை விடுத்த பாஜக
நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகத்தில் 69.46% வாக்குகள் பதிவானது. இந்தநிலையில் கோவையில் ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும், தென் சென்னை மற்றும் வட சென்னையிலும் வாக்காளர் பெயர் அதிகளவு நீக்கப்பட்டதாகவும், திமுகவினர் கள்ள ஓட்டு போட்டதாகவும் பாஜக வேட்பாளர்கள் சார்பாக புகார் தெரிவிக்கப்பட்டது.
வாக்கு சதவிகிதத்தில் குளறுபடி
எனவே சம்பந்தப்பட்ட இடங்களில் மறு வாக்குப்பதிவு நடத்த கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திலும் புகார் மனு பாஜக சார்பாக வழங்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் வாக்குப்பதிவு முடியும் போது தமிழகத்தில் 72 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அறிவித்த நிலையில், நேற்று 69% வாக்குகள் தான் பதிவானதாக தெரிவிக்கப்பட்டது. சுமார் 3% வாக்குகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்ய பிரதசாகு வெளியிட்டுள்ள தகவலில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகள் இப்போது கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் அனைத்தும் தேர்தல் நடத்தும் அதிகாரியின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, இப்போது வெளியிடப்பட்டுள்ள 69.46 சதவீத வாக்குப் பதிவில் இருந்து இறுதி வாக்குப் பதிவு என்பது சிறிய அளவில் மாறுபட்டு இருக்கலாம். அதேசமயம் இப்போதைய வாக்குப் பதிவு சதவீதத்தில் பெரிய அளவுக்கு மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை என தெரிவித்தார்.
மறு தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
அதே வேளையில் தமிழ்நாட்டில் எந்த ஒரு மக்களவைத் தொகுதிக்கும் மறு தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடி அதிகாரிகள் பரிந்துரைக்கப்படவில்லை என குறிப்பிட்டவர் எனவே தமிழகத்தில் எந்த தொகுதியிலும் மறுவாக்குப்பதிவு இல்லையென தெரிவித்தார். தற்போது அதிகாரப்பூர்வமாக தமிழ்நாட்டில் பதிவாகியுள்ள வாக்கு சதவிகிதம் 69.46 ஆக உள்ளது தொடர்ந்து இன்னும் தகவல் சேகரிக்கும் டேட்டா என்ட்ரி பணிகள் நடைபெற்று வருவதால் இதில் மிகச் சிறிய அளவில் மாற்றம் இருக்கும் எனவும் குறிப்பாக 69.46 லிருந்து அதிகபட்சம் பூஜ்ஜியம் புள்ளி 3 சதவீதம் வரை மாற்றம் இருக்கலாம் எனவும் தெரிவித்தார்.