கடலூர்

கடலூரில், நத்தவெளி சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 167 வீடுகளில் 16 வீடுகளை மாவட்ட நிர்வாகம் இடித்து தள்ளியது. இன்றும்,  இடித்து தள்ளும் பணிகள் தொடர்கிறது. 

கடலூர் மாவட்டம், திருப்பாதிரிப்புலியூரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் வகையில் சரவணாநகர் - நத்தவெளி சாலையை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் புதிய திட்டம் தயாரிக்கப்பட்டு பணிகளும் தொடங்கி நடைபெற்றது. 

ஆனால், சுமார் 60 அடி அகலம் கொண்ட நத்தவெளி சாலையில் இரண்டு புறமும் ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டிருந்ததால், பணிகளை விரைந்து முடிப்பதில் காலதாமதம் ஏற்பட்டன.

இதனையடுத்து, ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பவர்களை காலி செய்ய மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றறிக்கை வழங்கப்பட்டது. மேலும்,ஆக்கிரமித்து வீடு கட்டியிருந்த 167 குடும்பங்களுக்கும் காரைக்காட்டில் மாற்று இடம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. 

இதனால் நத்தவெளி சாலையில் உள்ள பெரும்பாலான வீடுகளை மக்களே முன்வந்து காலி செய்தனர். இதையடுத்து அந்த வீடுகளை இடித்து அகற்றும் பணி நேற்று தொடங்கியது. 

இதற்காக பொக்லைன் எந்திரத்துடன் நத்தவெளிரோட்டுக்கு நேற்று காலையில் வந்த அதிகாரிகள் அந்த வீடுகளை இடித்துத் தள்ளினார்கள். நேற்று மாலை வரை 16 வீடுகள் இடித்து தள்ளப்பட்டன. 

வீடுகள் இடிக்கப்பட்டதும் மற்ற வீடுகளில் உள்ளவர்களும் தங்கள் வீடுகளில் இருந்த பொருட்களை காலி செய்ய தொடங்கினர். ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றும் பணியை தாசில்தார் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர் சிவா மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து ஆக்கிரமிப்பு வீடுகள் இன்றும் அகற்றும் பணி நடக்கிறது.