காதலிக்க மறுத்ததால் மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்ததில் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாமமாக உயிரிழந்துள்ளார்.

மதுரை திருமங்கலத்தை அடுத்த நடுவாக்கோட்டையைச் சேர்ந்த மணிபாண்டி, பேச்சியம்மாள் என்ற தம்பதியின் மகள் சித்ராதேவி இவருக்கு வயது 14. சித்ராதேவி திரளியை அடுத்த அச்சம்பட்டியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இவரை அதே பகுதியை சேர்ந்த சந்தானம் என்பவரின் மகன் பாலமுருகன் ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.

பலமுறை தனது காதலை கூறியும் சிறுமி ஏற்க மறுத்ததாக கூறப்படுகிறது.  இதனை பெற்றோரிடம் சித்ராதேவி தெரிவித்ததை அடுத்து, அவரின் பெற்றோர் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் பாலமுருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனால் விரக்தியடைந்த பாலமுருகன் கடந்த 16ம் தேதி மாலை, மாணவி பள்ளி முடித்து பேருந்துக்காக காத்திருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த அவர் மாணவியின் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். 

தீவைக்கப்பட்ட மாணவி அலறி துடித்ததை கண்ட அக்கம்பத்தினர், தீயை அணைத்து சித்ராதேவியை திருமங்கலம் அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து பின்னர், மேல் சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், கடந்த 11 நாட்களாக தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்த மாணவி சித்ரா தேவி, இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவைத்து தப்பி ஓடிய பாலமுருகனை தீவிரமாக தேடி வந்த நிலையில், கடந்த 17ம் தேதி அச்சம்பட்டி அருகே காட்டுப்பகுதியில் மறைந்திருந்த அவரை கைது செய்தனர்.