காவல்துறை மீது வழக்கு பதிந்திடுக.! திமுகவிற்கு எதிராக இறங்கி அடிக்கும் கூட்டணி கட்சி

பெரம்பலூரில் மணிகண்டன் என்ற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

The cpm demands action against the police for the murder of a youth in Perambalur KAK

இளைஞர் படுகொலை

பெரம்பலூரில் மணிகண்டன் என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் காவல்துறையினர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்திட கோரிக்கை எழுந்துள்ளது.  இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலளார் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் கை.களத்தூர் கிராமம் காந்தி நகரைச் சேர்ந்த மோகன் என்பவரின் மகன் மணிகண்டன் (வயது 30) என்கிற தலித் இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொடூரமான இந்த படுகொலையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. 

கொலைக்கு காவலர்கள் உடந்தை

தீண்டாமையின் தொடர்ச்சியாகவே இந்த சாதிய வன்கொடுமை நடந்துள்ளது. இந்த தகராறை ஒட்டி சமாதானம் பேசலாம் என்று குற்றவாளிகளிடம் காவலர்களும், ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவரும் அழைத்துச் சென்றிருக்கிறார்கள். இவர்களின் முன்னிலையிலேயே இந்தக் கொலை நடைபெற்றுள்ளது.சட்ட ரீதியாக காவலர்கள் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். சம்மந்தப்பட்ட இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தியிருக்க வேண்டும். மாறாக கொலையாளி தேவேந்திரனிடம் கொலை செய்யப்பட்டவரை அழைத்துச் சென்றதன் மூலம் காவலர்களும் அந்தக் கொலைக்கு உடந்தையாக இருந்துள்ளனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்வதோடு, இந்தக் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் மீதும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து உடனடியாக கைது செய்யப்பட வேண்டும்.

வழக்கு பதிவு செய்திடுக

கொலை செய்யப்பட்டவரின் குடும்பத்திற்கு சட்டரீதியான இழப்பீடும் அவரது மனைவிக்கு அரசு வேலையும் வழங்கிட வேண்டுமென்றும், இத்த கைய நிகழ்வுகளில் சட்டத்திற்குப் புறம்பாக குற்றவாளிகளுக்கு உடந்தையாக காவல்துறை செயல்படுவதைத் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios