திருப்பூர் மாவட்டத்தில் 3 கண்டெய்னர் லாரியில் இருந்து பிடிபட்ட ரூ. 570 கோடி பண விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றுள்ளதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து வழக்கை சிபிஐ முடித்து வைத்தது.

கடந்த 2016 ஆம் ஆண்டு மே 13ஆம் தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற இடத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுச் செல்லப் பட்ட ரூ. 570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

அந்த பணம் பாரத ஸ்டேட் வங்கிக்கு சொந்தமானது என்றும் ஆந்திராவில் உள்ள கரன்சி மையத்திற்கு கோவையில் இருந்து கொண்டு செல்ல பட்டதாகவும், ரிசர்வ் வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து சிபிஐ விசாரனைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் சிபிஐ விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.

இதைதொடர்ந்து, பறக்கும் படையினரால் கைப்பற்றப்பட்ட ரூ. 570 கோடி பணம் வங்கிகளுக்கு சொந்தமானது என்றும் கோவையில் இருந்து விசாகபட்டினத்திற்கு வங்கி பணம் கொண்டு செல்லப்பட்டதாகவும் சிபிஐ உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இந்நிலையில், லாரியில் இருந்து பிடிபட்ட ரூ. 570 கோடி பண விவகாரத்தில் விதிமீறல் நடைபெற்றுள்ளதால் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்து வழக்கை சிபிஐ முடித்து வைத்தது.