திருப்பரங்குன்றம் மலையில் இரு மதத்தினரின் கோயில் மற்றும் தர்ஹா உள்ளது. அங்கு ஏற்பட்ட சர்ச்சையால் மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரிய மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை
மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையில் இரு மதத்தினரின் கோயில் மற்றும் தர்ஹா உள்ளது. அங்குள்ள தர்ஹாவில் ஆடு, கோழி பழியிடுவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையால் மோதல் போக்கு ஏற்பட்டது. இதனை கையில் எடுத்த பாஜக மற்றும் அதன் ஆதரவு அமைப்புகள் திருப்பரங்குன்றம் மலையை காக்க போராட்டம் நடத்தியது. இதனையடுத்து தற்போது சென்னையில் சென்னை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இருந்து கந்தகோட்டம் முருகன் கோவில் வரை பிப்ரவரி 18 ம் தேதி வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வேல் யாத்திரைக்கு அனுமதி .?
அதில் அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பின் வடசென்னை மாவட்ட துணை தலைவர் எஸ் யுவராஜ் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த மனுவில், மதுரை மாவட்டத்தில் உள்ள திருப்பரங்குன்றம் மலையை, சிக்கந்தர் மலை என்று இஸ்லாமியர்கள் எந்த வித அடிப்படையும் இல்லாமல் சொந்தம் கொண்டாடி, பிரச்னை செய்து வருவதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார். எனவே மலையை காக்க வேல் ஏந்தி பிப்ரவரி 18ம் தேதி நடைப்பயணமாக வேல் யாத்திரை நடத்த காவல்துறை அனுமதி வழங்க உத்தரவிடக் கோரியிருந்தார். மேலும் வேல் யாத்திரையில் 100 பேர் கலந்து கொள்வார்கள் என்றும் பொதுமக்களுக்கும் போக்குவரத்துக்கும் எந்த இடையூறு இல்லாமல் அமைதியான முறையில் வேல்யாத்திரை நடத்தப்படும் என தெரிவித்தார்.

தமிழக அரசு விளக்கம்
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளைந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது போது, தமிழக அரசு சார்பாக பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது. அதில், மனுதாரர் கேட்கக்கூடிய வழிப்பாதை மிகவும் நெருக்கடியான போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலை. ஏற்கனவே உரிமை குறித்து பிரிவி கவுன்சில் வரை சென்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல. கடந்த 18.01.2025 அன்று மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் என்ற பெயரில் பிராணிகளை பலியிட்டு தர்காவில் சமபந்தி விருந்திற்கு அழைப்பு விடுப்பது போன்று சில சமூக விரோதிகள் பொய்யான பதிவினை வெளியிட்டுள்ளார்கள். இது சம்பந்தமாக மதுரை முஸ்லீம் ஐக்கிய ஜமாத் மதுரை காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தள்ளுபடி செய்த நீதிபதி
திருப்பரங்குன்றம் மலையை சுற்றியுள்ள மக்கள் இந்து, முஸ்லீம் மற்றும் ஜெயின் ஆகியோர் மத வேறுபாடின்றி ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். மதத்தால் மற்றும் இனத்தால் என்றென்றும் தமிழ்நாடு மக்கள் ஒரே குடும்பத்தினராக தொன்று தொட்டு வாழ்ந்து வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
18.02.2025 அன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும் என தனது கடுமையான எதிப்பினை தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையின் வாதத்தை ஏற்று, மதுரை திருப்பரங்குன்றம் மலைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்துவது ஏற்புடையது அல்ல என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
