ED CASE : அனிதா ராதாகிருஷ்ணனை தூக்க திட்டம் போட்ட ED.. மனுவை டிஸ்மிஸ் செய்து ஷாக் கொடுத்த நீதிமன்றம்
அனிதா ராதாகிருஷணன் மீதாக சொத்து குவிப்பு வழக்கில் தங்களையும் சேர்த்துக்கொள்ளக்கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் திமுகவினர் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
அமைச்சர் மீது சொத்து குவிப்பு வழக்கு
அதிமுக ஆட்சிக் காலமான கடந்த 2001- 2006 வரையில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக அனிதா ராதாகிருஷ்ணன் இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.2.26 கோடி அளவுக்கு முறைகேடாக சொத்து சேர்த்ததாக அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி, மகன்கள் மற்றும் அவரது சகோதரர்கள் உள்ளிட்ட 7 பேர் மீது கடந்த 2006-ல் தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை பல கட்டங்களை கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமலாக்கத்துறை மனு
இந்தநிலையில் திடீரென தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசாருக்கு உதவிடும் வகையில் தாங்களையும் இந்த வழக்கில் சேர்த்து கொள்ள வேண்டும் என அமலாக்கத்துறை சார்பாக தூத்துக்குடி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவிற்கு அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக வழக்கு விசாரணை சரியான நிலையில் சென்று கொண்டுள்ளதாகவும், எனவே மூன்றாவது அமைப்பின் குறுக்கீடு தேவையில்லை. சட்டப்படியும் அது ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல. அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். எனவே, அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என வாதிடப்பட்டது.
மனு தள்ளுபடி- அமலாக்கத்துறை ஷாக்
இதே போல அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் விசாரணை 80% நிறைவடைந்துள்ளது, 71 சாட்சிகளிடம் விசாரணை முடிந்துவிட்டது. எனவே அமலாக்கத்துறையை இந்த வழக்கில் சேர்த்துக்கொள்ள கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதனையடுத்து இம்மனுவை விசாரணை செய்த தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ஐயப்பன், அமலாக்கத்துறையின் கோரிக்கையை நிராகரித்து, மனுவினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு செக் வைக்க நினைத்த அமலாக்கத்துறையின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் திமுகவினர் சற்று நிம்மதி அடைந்துள்ளார்.
அறிவாலய வாசலிலேயே இருக்கும் ஆர்.எஸ்.பாரதிக்கு வாய்த்துடுக்கு.. திமுகவை போட்டு தாக்கும் அண்ணாமலை..!