கோடை வெயில் தாக்கத்தால் நிலத்தடி நீர் குறைந்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் காய்கறி விலைகளும் உயர்ந்துள்ளதால், ஓட்டல் உணவு பொருட்களின் விலையை உயர்த்த, அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

அக்னி நட்கத்திர காலம் முடிந்தும், கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியே தலை காட்டாமல் உள்ளனர். பகல் மட்டுமின்றி இரவு நேரங்களிலும் அனல் காற்று வீசுவதால், பெரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அதே நேரத்தில், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. குழாய்களில் தண்ணீர் வராததால், பொதுமக்கள் காலி குடங்களுடன் பல்வேறு பகுதிகளுக்கு குடிநீர் தேடி அலைந்து திரிகின்றனர். இதற்கிடையில் ஆறு, குளம், குட்டை உள்பட அனைத்து நீர் நிலைகளும் வற்றி பாலைவனம் போல் காட்சியளிக்கிறது.

இந்தவேளையில், சென்னை உள்பட முக்கிய நகரங்களில் உள்ள ஓட்டல்கள், ரிசார்டுகளிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், லாரிகளில் தண்ணீர் கொண்டு வந்து, வாடிக்கையாளர்களுக்கு தருகின்றனர். சில ஓட்டல்களில் கழிப்பறை வசதி இல்லை என்ற பலகையை வைத்துள்ளனர். இதனால், உணவு சாப்பிடுவதற்காக செல்லும் மக்கள் தவிக்கின்றனர்.

இதேபோல் தண்ணீர் தட்டுப்பாட்டால் காய்கறி பயிரிடுவதை, விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். இதனால், காய்கறிகளின் விலைகளும் அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் காய்கறிகளின் விலை உயர்வால், ஓட்டல் உணவுகளின் விலை உயர்த்த அதன் உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். விரைவில் அதற்கான அறிவிப்பை வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.