The conflict between the two sides in the Karaikal
எதிரே பாட்டுப்பாடிக் கொண்டு வந்தவர், தன்னைத்தான் பாடி கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டதன் விளைவாக 8 பேருக்கு அரிவாள் வெட்டுவிழுந்த சம்பவம் காரைக்காலில் நடந்துள்ளது.
காரைக்கால் பகுதி, திருநள்ளாறு அருகே அத்திப்படுகை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் இளைஞர் மணிகண்டன். இவர், இரு நாட்களுக்கு முன்பாக சாலையில் பாட்டு பாடிக்கொண்டே நடந்து சென்றள்ளார்.. அப்போது எதிரே கந்தகுமார் என்ற இளைஞர் வந்திருக்கிறார்.
எதிரே பாட்டு பாடிக் கொண்டு வந்த மணிகண்டன், தன்னைத்தான் கிண்டல் செய்வதாக கந்தகுமார் நினைத்து, ஏன் என்னை கிண்டல் செய்து பாட்டு பாடுகிறார் என்று மணிகண்டனிடம் கேட்டுள்ளார்.
இதனால் அவர்கள் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. இது பின்னர் சண்டையில் முடிந்தது. இதையடுத்து, அருகில் இருந்தோர், அவர்களை விலக்கி விட்டனர்.
இந்த விஷயம், மணிகண்டனின் சகோதரி அபிநாயவுக்கு தெரிந்த நிலையில், தனது கணவர் மாவீரன் மற்றும் உறவினர்கள் சிலர் நேற்று அத்திப்படுகை வந்து கந்தகுமாரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்
அப்போது கந்தகுமாருக்கு ஆதரவாக அவரது தந்தை முருகசாமி, அவரின் தம்பி சாமுராஜ் ஆகியோரும் பேசியுள்ளனர். வாய்த்தகராறில் ஈடுபட்ட இரண்டு தரப்பும் திடீரென அரிவாள், கம்பி, உருட்டைக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். இதில் 8 பேருக்கு பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு வந்த போலீசார், அரிவாள் வெட்டுபட்ட 8 பேரையும், காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவர்கள் 8 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
